Home உலகம் தாய்லாந்து பாராளுமன்ற தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

தாய்லாந்து பாராளுமன்ற தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

572
0
SHARE
Ad

thailand

பாங்காக், பிப் 1- தாய்லாந்தில்  பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவியிறக்கம் செய்யப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் தாக்சுபன் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி அரசுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியதால், கடந்த 2 மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து அமலில் உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த மாதம் 37 எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய இடைக்கால பிரதமர் இங்க்லக், ‘போராட்டக்காரர்களுக்கு பயந்து தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. திட்டமிட்டபடி பிப்ரவரி 2 -ம் தேதி தேர்தல் நடந்தே தீரும்’ என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, நாளை நடைபெறும் தாய்லாந்து பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் வாக்குரிமை பெற்ற 4 கோடியே 90 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக சுமார் 2 லட்சம் போலீசாருடன் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய வாக்குப்பதிவின் போது வன்முறை சம்பவங்கள் தலைதூக்கினால், உடனடியாக வாக்குச்சாவடிகளை இழுத்து மூடும்படி தாய்லாந்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.