கூச்சிங், பிப் 8 – இன்று நடைபெற்ற பிபிபி (Parti Pesaka Bumiputera Bersatu) உச்ச மன்ற கூட்டத்தில் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் அம்மாநில ஆளுநராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிபியின் நிரந்தர தலைவர் முகமத் அசிபியா அவாங் நஸ்ஸார் கூறுகையில், “அப்துல் தாயிப் முதலமைச்சராக கணக்கில்லா பங்களிப்பை செய்துள்ளார். அது அவர் முதல்வராக இருந்த மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கும் தான். எனவே உச்ச மன்ற அவரது சேவையை பாராட்டி அவரை மாநிலத்தின் தலைவராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டுள்ளது” என்று இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
எனினும், அப்துல் தாயிப் எப்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்பதை கூற முகமட் அசிபியா மறுத்து விட்டார்.
‘ஒரு குறிப்பிட்ட’ காலத்தில் அவர் பதவி விலகுவார் என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறினார்.
அடுத்த சரவாக் மாநில தேர்தலில், புதிதாக முதலமைச்சராகப் பதவியேற்பவர் தான் தேசிய முன்னணிக்கு தலைமை வகிப்பார் என்று குறிப்பிட்ட அசிபியா, எதிர்வரும் மாநில தேர்தலுக்கு முன்னர் தாயிப் பதவி விலகுவார் என்றும் தெரிவித்தார்.