புதுடில்லி, பிப் 11 – பாரதிய ஜனதா தன் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் ராகுல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மொத்தம், 80 லோக்சபா தொகுதிகளை உடைய உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சியான பகுஜன் சமாஜும் பிரதமர் பதவியை குறிவைத்தே லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.அக்கட்சி சார்பில், பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் முன்னாள் முதல்வர் மாயாவதி.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 40 இடங்களில் வெற்றி பெற்று விட்டால், தனக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார். மற்றொரு மாநில கட்சியான, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜியும், பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ளார்.
தேசிய கட்சிகளால், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி, ராகுல், மாநில கட்சிகளால், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய, ஐந்து பேரும், திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.
மொத்தத்தில், வரும் லோக்சபா தேர்தல் மூலம், மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவை, திருமணம் செய்து கொள்ளாத ஒருவரே, ஆளப்போகிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இருந்தாலும், இது மாற்றத்துக்கு உட்பட்டது.