Home நாடு வேதமூர்த்தி ராஜினாமா! நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு காரணமா?

வேதமூர்த்தி ராஜினாமா! நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு காரணமா?

866
0
SHARE
Ad

1003081_10153791717555165_202924877_n-763306கோலாலம்பூர், பிப் 17 – அண்மையில் துணையமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியா சென்றிருந்த ஹிண்ட்ராப் தலைவர்  பி.வேதமூர்த்தி அங்கு பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவரும், அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை மரியாதை நிமத்தம் சந்தித்தார். அந்த செய்தியும் பத்திரிக்கைகளில் புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது.

#TamilSchoolmychoice

அவர்களின் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே, வேதமூர்த்தி தனது அனைத்து அரசாங்கப் பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளது தற்போது புதிய ஆரூடங்களைக் கிளப்பியிருக்கின்றது.

வேதமூர்த்தி-நரேந்திர மோடி சந்திப்பிற்கும், வேதமூர்த்தியின் ராஜினாமாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஹிண்ட்ராப்-தேசிய முன்னணி தேனிலவின் சோக முடிவு

ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளை புரிந்து கொண்ட ஒரே அணி தேசியமுன்னணி தான் என்று கூறி, பொதுத்தேர்தலுக்கு முன் எந்த வேகத்தில் அதனுடன்இணைந்தாரோ, அதே வேகத்தில் அண்மையில் அவர்களுடனான உறவுகளை முறித்துக் கொண்டு, அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி.

தன்னிடம் முறையாகத் தெரிவிக்கவில்லை என பிரதமர் நஜிப்பும் வருத்தத்துடன் அறிக்கை விடும் அளவுக்கு திடுதிடுப்பென்று வேதமூர்த்தி அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டார் என்று சாக்குப் போக்கு சொன்னாலும், தேசிய முன்னணியுடனான ஒப்பந்தத்தை செயல்படுத்த தான் எடுத்த முயற்சிகள் என்ன, அவை ஏன் தோல்வியில் முடிந்தன என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் வேதமூர்த்தியின் தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அவரது திடீர் பதவி விலகல் குறித்து நாட்டில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

குறிப்பாக, வேதமூர்த்தி பதவி விலகுவதற்கு முன்னர், இந்தியாவிற்கு சென்று பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை சந்தித்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படிப்பட்டஒரு தலைவரை சந்தித்து ஆலோசனை பெற்றதன் மூலம், ஹிண்ட்ராப் இயக்கத்தை தனி அரசியல் கட்சியாக, பாரதீய ஜனதா பாணியில்  மாற்றும் எண்ணம் வேதமூர்த்திக்கு வந்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

மோடியுடனான சந்திப்பு குறித்தும் இதுவரை வேதமூர்த்தி விரிவான விளக்கம் எதையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஜாங் தேர்தல் காரணமா?

இதற்கிடையில், காஜாங் இடைத் தேர்தல் சமயத்தில் ராஜினாமா செய்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்னும் நோக்கத்தலும் வேதமூர்த்தி ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் வேறு சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், அன்வார் இப்ராகிமே காஜாங்கில் வேட்பாளராக நிற்பதால், அங்கு வேதமூர்த்திக்கு அதிகம் பிரச்சார வேலை இருக்க வாய்ப்பில்லை. வேதமூர்த்தி சொல்லி அன்வாருக்கு வாக்களிக்க வேண்டுமா இல்லையா என்ற முடிவை எடுக்கும் நிலையிலும் காஜாங் இந்திய வாக்காளர்களோ, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள இந்திய வாக்காளர்களோ இன்றைக்கு இல்லை.

வேதமூர்த்தியின் மீதான நம்பிக்கையை இந்திய வாக்காளர்கள் கடந்த பொதுத் தேர்தலிலேயே இழந்து விட்டார்கள்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் பக்கம் போகிறோம் என்ற முடிவை ஹிண்ட்ராப் எடுத்தால் – காஜாங்கில் அன்வாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினால் – அப்போதுதான் அது பரபரப்பான செய்தியாக இருக்கும்.  மற்றபடி எந்தவிதத்திலும் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை மீண்டும் பெற ஹிண்ட்ராப் கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கும்.

இந்த சூழ்நிலையில் தான் நரேந்திர மோடியின் ஆலோசனையைப் பின் பற்றி ஹிண்ட்ராப்பை தனிக்கட்சியாக மாற்றினால் அதன் மூலம் தேசிய முன்னணியுடன் கைகோர்த்த காரணத்தால் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க முடியும்  என்ற எண்ணத்தில் வேதமூர்த்தி குழுவினர் அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.