கொழும்பு,பிப்17-இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா.,. தெரிவித்துள்ளது.
சரண் அடைய சென்ற ஏராளமான விடுதலை புலிகளை, இலங்கை ராணுவம் சுட்டு கொன்றதாக புகார் உள்ளது.. “இறுதி கட்ட சண்டையின் போது நடந்த போர் குற்றங்கள் குறித்து, தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இலங்கையில், போர் பாதித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய, அமெரிக்கா, நீதிபதி ஒருவரும், வெளியுறவு துணை அமைச்சர், நிஷா தேசாய் பிஸ்வாலும், சமீபத்தில், கொழும்பு பயணம் மேற்கொண்டனர்.
இலங்கை அரசு, மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், திருப்தி அளிக்காததால், ஜெனிவாவில், அடுத்த மாதம், நடைபெற உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணைய கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக, மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்ற, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதை தடுப்பதற்காக, இலங்கை அரசு பிரதிநிதிகள், அமெரிக்கா சென்று, உரிய தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதற்கிடையே, ஐ.நா.,மனித உரிமை ஆணைய தலைவர், நவநீதம் பிள்ளை, இலங்கை போர் குற்றம் குறித்து, சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக, அவர், 74 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளார்.