புதுடெல்லி, பிப் 21 -‘ராஜிவ் காந்தி படுகொலை என்பது, இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.
ராஜிவ் கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை விடுவிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பிரதமர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜிவ் கொலை என்பது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கை.
ஒரு நாட்டின் பிரதமர் மீது நடத்தப்பட்ட கொலை தாக்குதல், அந்த நாட்டின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சமம். கொலையாளிகளை விடுவிப்பது என்பது சரியல்ல.
தீவிரவாதிகள் விஷயத்தில் நாம் மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது.
அதனால் விபரீதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதற்கு நாம் இடம் அளித்து விடக்கூடாது.
ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசு எடுத்த முடிவு, சட்டப்படி ஏற்கத்தகுந்தது அல்ல.
மேற்கொண்டு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.ராஜிவ், நம் நாட்டின் மிகச்சிறந்த தலைவர்.
அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சியில் இருந்து மீளாத துயர சம்பவம் என்பது மறக்க முடியாது. அந்த சம்பவத்தில் அப்பாவி இந்திய மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலைகளை செய்த குற்றவாளிகளை விடுவிப்பது என்பது, நீதித்துறையின் எல்லா கொள்கைகளையும் மீறிய செயல்.
இதை தமிழக அரசு ஒருபோதும் செய்ய கூடாது என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.