Home தொழில் நுட்பம் வாட்ஸ்எப் சேவையில் தொலைபேசிக் குரல் தொடர்பு சேர்க்கப்படும்!

வாட்ஸ்எப் சேவையில் தொலைபேசிக் குரல் தொடர்பு சேர்க்கப்படும்!

737
0
SHARE
Ad

Jan Koum Whatsap 440 x 215பிப்ரவரி 25 – அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட குறுந்தகவல் செயலியான வாட்ஸ்எப் தனது சேவைகளில் விரைவில் தொலைபேசிக் குரல் தொடர்புகளை விரைவில் ஏற்படுத்தவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

வாட்ஸ் எப் சேவையில் தற்போது குரல் வழி பேச்சுக்களைப் பதிவு செய்து அனுப்பும் சேவை இருக்கின்றது. ஆனல் புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் சேவை, மற்ற கைத்தொலைபேசிகளைப் போல நேரடிக் குரல் பரிமாற்றமாக இருக்கும்.

முதல் கட்டமாக அண்ட்ரோய்ட் மற்றும் ஐ-போன் வகைகளில் இந்த சேவை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ்எப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் கவும் (படம்) அறிவித்துள்ளார்.

இதன் மூலம் இலவசமாக நேரடிக் குரல் சேவையை இணையத்தின் வழி கைத்தொலைபேசிகளில் வழங்கும் வைபர் (viber) சேவைக்கு கடும் போட்டியை வாட்ஸ்எப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“எங்களிடம் மிகச் சிறந்த குரல் தொடர்பு தொழில் நுட்பம் இருக்கின்றது.மிகக் குறைந்த அலைவரிசைத் தடத்தையே நாங்கள் பயன்படுத்துகின்றோம். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாங்கள் இந்த சேவையைத் தொடக்குவோம்” என ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக செல்பேசி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஜான் கவும் கூறினார்.

“கடந்த வாரம் எங்களின் வாட்ஸ்எப் சேவையில் ஃபேஸ்புக் என்ற புதிய நண்பரைச் சேர்த்துக் கொண்டுள்ளோம். இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா  என்பது எனக்குத் தெரியவில்லை” என்றும் 38 வயதான ஜான் கவும் கிண்டலாகப் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

வாட்ஸ்எப் செயலி சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியதிலிருந்து, வணிக உலகில் பல்வேறு முரண்பாடான கருத்துகள் எழுந்துள்ளன.

தற்போது முதல் ஆண்டில் இலவசமாகவும், பின்னர் 1 அமெரிக்க வெள்ளி விலையிலும், விளம்பரங்களின்றி வழங்கப்படும் வாட்ஸ்எப் சேவையில், ஃபேஸ்புக்கின் வரவால், விளம்பரங்கள் இணைக்கப்படுமா என்பதுதான் தற்போது பயனீட்டாளர்களால் தீவிரமாக விவாதிக்கப்படும் கேள்வியாகும்.

இதுவரை தங்களின் வணிகத் திட்டங்களில் விளம்பரங்களை சேர்ப்பது குறித்து தாங்கள் திட்டமிடவில்லை என்றும் ஜான் கவும் வலியுறுத்தியுள்ளார்.