Home நாடு பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்து காலிட் இப்ராகிம் போட்டி!

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்து காலிட் இப்ராகிம் போட்டி!

723
0
SHARE
Ad

khalid-ib-jun20மார்ச் 1 – அன்வாருக்கு வழி விட்டு மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விருந்தொன்றில் உரையாற்றிய போது யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த திடீர் அறிவிப்பை அவர் செய்தார்.

தனது உரையில், அனைவரும் காஜாங் இடைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனக் கூறிய அவர், தான் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

காஜாங் இடைத் தேர்தல் நடைபெறப் போகும் தருணத்தில் இந்த அறிவிப்பை காலிட் செய்துள்ளது பிகேஆர் வட்டாரத்தில் பலத்த வாதப் பிரதிவாதங்களை முடுக்கிவிட்டிருக்கிறது என்பதோடு, ஏன் இந்த நேரத்தில் கட்சியைப் பிளவுபடுத்தும் வண்ணம் அவர் இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

காலிட்டுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருக்கும் உட்கட்சி அரசியல் போராட்டத்தின் உச்ச கட்டமாக மே மாதம் நடைபெறும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டி இருக்கும். இரண்டாவது தவணையாகப் போட்டியிடவிருக்கும் அஸ்மினை எதிர்த்துத்தான் காலிட் போட்டியில் குதிக்கவிருக்கின்றார்.

எதிர்வரும் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவராக அன்வார் இப்ராகிம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காஜாங் இடைத் தேர்தலுக்கு முன்பாக அவசரம் அவசரமாக நீர்ப் பங்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காலிட் கையெழுத்திட்டதும், அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அன்வார் அறிவித்ததும் கூட அண்மையில் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது.

Azmin Aliநீண்ட காலமாக பிகேஆர் கட்சியில் முக்கிய பங்காற்றி வருவதோடு, அன்வாரின் போராட்ட காலங்களில் அவருடன் உறுதுணையாக களத்தில் இருந்த அஸ்மின் அலி கட்சி வட்டாரங்களில் அடிமட்டத் தொண்டர்களிடையே நெருக்கமான தொடர்புகளையும் வளர்த்து வந்திருக்கின்றார். இத்தகைய பின்னணியைக் கொண்டிராத காலிட் போட்டியிட்டு அஸ்மின் அலியை வெல்வது என்பது கடினம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதிலும் கட்சித் தேர்தல் நடைபெறும் காலத்திற்குள், அன்வார் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார் ஆகிவிட்டால், அதற்குப் பின்னர் எந்தவிதப் பதவி பலமும் இல்லாமல் அஸ்மின் அலியை எதிர்கொள்வது காலிட்டுக்கு கடுமையான போராட்டமாகவே இருக்கும்.