உக்ரைன், மார்ச் 1- நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் இன்று ரஷியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளார். அந்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை ரஷ்ய ஆதரவு படைகள் கைப்பற்றி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
அந்நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைனில் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவில் பேட்டியளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் உக்ரைனில் கடந்த மூன்று மாதங்களாக நிகழ்ந்து வரும் அசாதாரணமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர தங்கள் நாட்டு ராணுவத்தை அனுப்ப தயார் என்று கூறியுள்ளார். இவ்வாறு ரஷ்ய படைகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவது ராணுவ அத்துமீறலாக தான் கருதப்படவேண்டும் என இடைக்கால உக்ரைன் அதிபர் ஒலக்சாண்ட்ர் டர்ச்சினோவ் தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை ரஷ்ய தனது படைகளை அங்கு அனுப்புமானால், மிகப்பெரிய மோதல் நிகழ வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் கருதுகின்றன.