சென்னை, மார் 3 – தமிழ் படத்துக்கு இசை அமைப்பதற்காக ஹாலிவுட் படத்தை கைவிட்டேன் என்றார் ரஹ்மான். அங்காடி தெரு, அரவான் படங்களையடுத்து வசந்தபாலன் இயக்கும் படம் காவியத் தலைவன். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், சந்தானம் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
எஸ்.சஷிகாந்த், வருண் தயாரிக்கின்றனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ரஹ்மான் கூறியதாவது, இப்படத்தை ஒப்புகொண்டபோது எனக்கொரு பிரச்னை இருந்தது. அந்த நேரத்தில் ஹாலிவுட் படம் ஒன்றிற்கு இசை அமைக்க பேச்சு நடந்துவந்தது.
வசந்தபாலன் என்னிடம் வந்து காவியத் தலைவன் பட கதையை சொன்னார். மிகவும் பிடித்திருந்தது. கைவசம் வேறு சில படங்களும் இருந்தன. இசையமைத்தால் அந்த ஹாலிவுட் படம், அல்லது இந்த படம் என்ற நிலை ஏற்பட்டது. நான் ஹாலிவுட் படத்தை தேர்வு செய்யாமல் கைவிட்டேன். 1930-களில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை, தொழில் போன்றவற்றை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டது.
சிறியதும், பெரியதுமாக 20 பாடல்கள் இடம்பெறுகிறது. அந்த காலத்தில் நாடகத்துக்கு இசை அமைத்தவர்கள் ஒரு பாணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த பாணியை ஒட்டியதாகவும், அதேசமயம் அதில் தேவையான நவீன இசையையும் சேர்த்து இசை அமைக்க முடிவு செய்தேன். எந்த ராகத்தில் இசை அமைப்பது என்றுதான் பல நாட்கள் யோசனையில் ஆழைந்தேன். அதற்கான வழி கிடைத்ததும் உடனடியாக இசையை தொடங்கிவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.