ஜெனிவா, மார் 4 – இலங்கை நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பான்கீமூன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் துவங்கிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ்புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களை கொன்ற அந்நாட்டு அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கொண்டுவர வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை பாரபட்சமற்றது என்று பான்கீமூன் பாராட்டியுள்ளார்.
சர்வதேச அளவில் நடக்கும் மனித உரிமை மீறல்களால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் வன்கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விளிப்புடன் இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் போர்க்குற்றங்களை விட்டுவிட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென பான்கீமூன் எச்சரித்தார்.
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கை வரும் 26-ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஜெனிவா மாநாட்டில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக்கொரி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையும் எடுத்துள்ளதால் ஜெனிவா மாநாட்டில் ராஜபக்ஷேவின் அரசு கடும் நெருக்கடிகளை சந்திக்கும் என்பது உறுதியாகியுள்ளது.