மார்ச் 5 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது புதிய பதிப்பான விண்டோஸ் 8.1 ஐ மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்திலும், பயனர்களை அதிகரிக்கும் நோக்கத்திலும் அதை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிங் (Bing) தேடு தளத்துடன் இணைந்து விண்டோஸ் 8.1 இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விண்டோஸ் 7 பயனர்களுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
குறைந்த விலை விண்டோஸ் 8.1 இயங்குதளம் தயாரிப்பு குறித்து கசியும் செய்திகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.
அதே நேரத்தில், பிங் தேடு தளத்துடன் கூடிய குறைந்த விலை விண்டோஸ் இயங்குதளத்தை, விண்டோஸ் செல்பேசிகளுக்கு தயாரிப்பது குறித்தும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
விண்டோஸ் ஆர்.டி ஐயும், விண்டோஸ் செல்பேசிகளையும் இணைப்பது, குறைந்த விலை விண்டோஸ் 8.1 இயங்குதளம் வெளியிடுவது போன்ற அனைத்து தகவல்களும் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.