மாநாட்டிற்கிடையே நேற்று, இலங்கை அதிபர் ராஜபக்சேயை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களிடம் கூறியதாவது, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, இந்த சந்திப்பில் எதுவும் பேசப்படவில்லை.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சேயிடம் கவலை தெரிவித்தார். வாழ்வாதார விஷயத்தை மனிதத்தன்மையுடன் அணுகவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். மேலும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர் என சையத் அக்பருதீன் கூறினார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில், பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேயை, பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த எதிர்ப்புக்கு இடையே பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசியுள்ளார்.
எனினும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தலைமையில் 4 நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பது குறித்து ராஜபக்சேயிடம், மன்மோகன் சிங் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மியான்மர் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை நாடு திரும்பினார்.