புவனேஸ்வர், மார் 5 – காவலர்களால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் தலைவர் சபயசாச்சி பாண்டா ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழங்குடியின ஆர்வலரும், மாவோயிஸ்ட் என்று சந்தேகிக்கப்படுபவருமான சோனி சூர், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
இதையடுத்து காவலர்களால் தேடப்பட்டு வரும் ஒடிஷாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவர் சபயசாச்சி பாண்டா ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாண்டாவை தங்கள் கட்சியில் சேர்ப்பது குறித்து அவருடன் ஆம் ஆத்மி கட்சி கடந்த ஜனவரி மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
சபயசாச்சி பாண்டாவை பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் (மலேசியா-27,800.வெள்ளி) பரிசு வழங்கப்படும் என்று ஒடிஷா காவலர்களால் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி கஞ்சம் மாவட்டத்திலுள்ள காட்டுப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாண்டா படுகாயமடைந்தார். இருப்பினும் அவர் எங்களிடம் இருந்து தப்பியோடிவிட்டார்.
நாங்கள் அவரின் கூட்டாளிகளான 3 பெண்கள் உள்பட 6 பேரை கைது கடந்த வாரம் கைது செய்தோம். தாக்குதலில் பாண்டா படுகாயம் அடைந்ததை அந்த பெண்கள் உறுதிபடுதத்தினர் என்றார். தென் சரக டி.ஐ.ஜி. அமிதாப் தாகூர் கூறுகையில், நாங்கள் விரைவில் பாண்டாவை கைது செய்வோம். அவர் மீது பல முக்கிய வழக்குகள் உள்ளன. அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு சுவாமி லக்ஷ்மிநானந்த் சரஸ்வதியை கொலை செய்துள்ளார்.
அதே ஆண்டு நடந்த பெரிய கொள்ளை சம்பவத்திற்கு அவர் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றார். பாண்டா பல காவலர்களை கொலை செய்துள்ளான் என்று கூறப்படுகிறது. அவர் 2012-ஆம் ஆண்டு இரண்டு சுற்றுலாப்பயணிகளை கடத்திச் சென்றார். ஒடிஷாவின் பெரிய மாவோயிஸ்ட் தலைவர் பாண்டா தான் என்பது குறிப்பிடத்தக்கது.