மார்ச் 6 – தொடர்ந்து உயர்ந்து வரும் சிங்கப்பூரின் நாணயத்தின் மதிப்பு மற்றும் அந்த நாட்டில் பொருட்களின் விலைகள் கண்டுள்ள ஏற்றம் ஆகிய காரணங்களால், உலகிலேயே அதிக விலையுயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.
கடந்த மாதம் சிங்கப்பூர் நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் சிகரெட்டுகள், மதுபானங்கள் மற்றும் சூதாட்டங்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் உயர்ந்துள்ளன.
இதுவரை இந்த தகுதியைக் கொண்டிருந்த நகர் ஜப்பானின் தலைநகரான தோக்கியோ ஆகும். இப்போது 6வது இடத்திற்கு தோக்கியோ தள்ளப்பட்டுவிட்டது.
முதலிடத்தை சிங்கப்பூர் பிடிக்க, உலகின் அடுத்த நிலை விலையுயர்ந்த நகர்களாக பாரீஸ், ஒஸ்லோ, சூரிச், சிட்னி ஆகியவை திகழ்கின்றன.
உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளையும், தனியார் பள்ளிகள், வீட்டு வேலை செய்பவர்களின் சம்பளம் போன்ற அம்சங்களையும் கருத்தில் கொண்டு, உலகின் விலையுயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நகர் எது என்பதை மேற்கூறப்பட்ட ஆய்வு நிர்ணயிக்கின்றது.
நியூயார்க் நகரை அடிப்படையாக வைத்து உலகம் முழுவதிலும் உள்ள 131 நகர்களை ஆய்வு செய்து மேற்கூறப்பட்ட முடிவுகள் காணப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், செல்வச் செழிப்பு கூடி வருவதாலும் பல அம்சங்களின் முன்னணி வகிக்கும் சிங்கப்பூரின் வாழ்க்கைச் செலவினங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
தனியார் வங்கிகள் அதிகமாகத் திறக்கப்பட்டிருப்பதாலும், பல உலகளாவிய நிறுவனங்களுக்கான பிரதேச மையமாக சிங்கப்பூர் விளங்குவதாலும், இங்கு பணிபுரியும் உயர்நிலை அதிகாரிகளுக்கான சம்பளமும் ஹாங்காங் போன்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாக வேலைவாய்ப்பு நிறுவனங்களின் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த மாதம் விதிப்பட்ட புதிய கூடுதல் வரிகளினால், மதுபானங்களின் விலைகள் 25 சதவீதம் கூடியுள்ளது. சிகரெட்டுகள், உற்பத்தி செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் 10 சதவீதம் உயர்வு கண்டுள்ளன. ஏற்கனவே, இவற்றின் விலைகள் சிங்கப்பூரில் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.