சிட்னி, மார்ச் 7 – இலங்கை இறுதிகட்ட போரின் போது சரணடைந்த பல விடுதலைப் புலி தலைவர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட புதிய ஆதாராங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன், கர்னல் ரமேஷ் போன்ற தலைவர்கள் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
ஆனால் சரணடைந்த பின்னரும், சிங்கள இராணுவத்தினர் அவர்களை சித்திரவதை படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
இது தொடர்பான புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் இது தொடர்பான ஆதாரங்களை வழங்கியதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த பாதுகாப்புப் படை வீரர் கூறுகையில், நடேசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால் சரணடைந்த சில மணி நேரங்களில் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
சிங்கள இராணுவத்தால் நான் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டேன். அப்போது புலித்தேவன், ரமேஷ், நடேசன் உள்ளிட்டோர் குண்டடிபட்ட காயங்களுடன் பிணமாகக் கிடந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களுடன் இலங்கையில் நடந்த பல்வேறு போர் குற்றங்கள் தொடர்பாகவும் அந்த நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.