Home வணிகம்/தொழில் நுட்பம் 13.1 மில்லியன் பயனர்களைக் கொண்டு மலேசியாவின் 1வது தொலைத் தொடர்பு நிறுவனமாக செல்கோம்!

13.1 மில்லியன் பயனர்களைக் கொண்டு மலேசியாவின் 1வது தொலைத் தொடர்பு நிறுவனமாக செல்கோம்!

761
0
SHARE
Ad

Celcom logo 440 x 215கோலாலம்பூர், மார்ச் 7 – மலேசியாவின் முதலாவது நிலையிலான தொலைத் தொடர்பு நிறுவனமாக செல்கோம் (Celcom) சாதனை புரிந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் விளக்கமளிப்பு கூட்டத்தில் செல்கோம் சேவையை நடத்தும் நிறுவனமான செல்கோம் எக்ஸ்சியாத்தா (Celcom Axiata) தற்போது தங்களின் பயனர்களின் எண்ணிக்கை 13.1 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் 2013ஆம் ஆண்டில் தாங்கள் அடைந்துள்ள இலாபம் 2.4 பில்லியன் மலேசிய ரிங்கிட்டை எட்டியது என்றும் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரையில் முதலாவது நிலையை மேக்சிஸ் நிறுவனம்தான் பெற்றிருந்தது எனக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்கோம் தற்போது 10.2 மில்லியன் முன்கட்டண  பயனர்களையும், 2.9 மில்லியன் நிரந்தர பயனர்களையும் கொண்டுள்ளது. இவர்களில் 48% சதவீதத்தினர் திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1.2 மில்லியன் பயனர்கள் செல்பேசியின் கம்பியற்ற அகண்ட அலைவரிசை இணைய சேவையைப் பயன்படுத்துவதால், இந்த சேவையில் நாட்டிலேயே அதிக பயனர்களைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் செல்கோம் திகழ்கின்றது.

Celcom Shazali -  300 x 200இந்த விவரங்களை செல்கோம் எக்ஸ்சியாத்தா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ ஷசாலி ரம்லி (படம்) வெளியிட்டார்.

நிரந்தர பயனர்களின் மூலம் சராசரி ஒரு பயனருக்கு 88 ரிங்கிட் வருமானத்தைப் பெற்ற செல்கோம், முன்கட்டண பயனர்களிடத்தில் சராசரி ஒரு பயனருக்கு 35 ரிங்கிட்டை வருமானமாகப் பெற்றது. இருதரப்பு பயனர்களையும் இணைத்துப் பார்த்தால் சராசரியாக ஒரு பயனருக்கு 46 ரிங்கிட் விகிதத்தில் செல்கோம் வருமானத்தைப் பெற்றது.

அகண்ட இணைய அலைவரிசையின் மூலம் சராசரி ஒரு பயனருக்கு 54 ரிங்கிட்டை செல்கோம் வருமானமாகப் பெற்றது.

பயனர்களுக்கான சேவைகளை இந்த ஆண்டில் விரிவுபடுத்தவும் செல்கோம் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. புளு கியூப் (Blue Cube stores) எனப்படும் விற்பனை மையங்களை 62 ஆக இந்த ஆண்டிற்குள் உயர்த்தும் அதே வேளையில், மேலும் 26 செல்கோம் சேவை மையங்களை நாடெங்கிலும் திறக்கவும் செல்கோம் முடிவு செய்துள்ளது.

2.4 பில்லியன் ரிங்கிட் இலாபம்

இதற்கிடையில், செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும், செலவினங்களைத் திறம்பட நிர்வகித்த காரணங்களாலும் கடந்த ஆண்டைவிட 7 சதவீத இலாப உயர்வு கண்ட செல்கோம் 2.4 பில்லியன் ரிங்கிட்டை கடந்த ஆண்டு நிகர இலாபமாகப் பெற்றது. இது வருமான வரி போன்ற கழிவுகளுக்குப் பின்னர் பெற்ற இலாபமாகும்.

கடந்த ஆண்டில் 3.6 பில்லியன் ரிங்கிட்டை வரிக்கு முந்திய இலாபமாக செல்கோம் பெற்றது.

2012இல் 7.7 பில்லியன் ரிங்கிட்டை வருமானமாகப் பெற்ற செல்கோம் கடந்த ஆண்டில் 8 பில்லியன் ரிங்கிட்டை வருமானமாகப் பெற்றது.

மேலும் தனது தொழில் நுட்பங்களை விரிவாக்கும் செல்கோம் இந்த ஆண்டு கவனம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.