புதுடில்லி, மார்ச் 8 – இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாக பேசிய பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கற்களை எறிய வேண்டாம் என தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுகிழை இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியை உத்திதபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சுவாமி விவேகானந்த் சுபார்த்தி பல்கலை மாணவர்கள் கண்டு கொண்டிருந்தனர். இப்பல்கலைகழகத்தில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். போட்டி பாகிஸ்தானிற்கு ஆதரவாக முடிந்ததையடுத்து காஷ்மீர் மாநில மாணவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என உரத்த குரலில் கோஷமிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இந்திய மாணவர்களுக்கும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 67 மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து மாநில அரசு தகுந்த பாதுகாப்புடன் மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்று காஷ்மீர் மாநில எல்லையில் விட்டதுடன் அவர்கள் மீது தேச விரோதவழக்கு பதியவும் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்தது.
மாணவர்கள் மீது போடப்பட்ட தேசதுரோக வழக்கு குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும், உத்திதபிரதேச மாநில அரசு இதனை பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மாநில முதல்வரின் வேண்டுகோளை ஏற்ற உத்திதபிரதேச அரசு வழக்கு பதிவு செய்யப்பட்ட தினத்தன்று சில மணி நேரங்களில் வழக்கை திரும்பப் பெற்றது. மாணவர்களின் மீதான வழக்கை திரும்பப் பெறப்பட்டதை தெரிந்து கொண்ட பாக்கிஸ்தான் அரசு
மாணவர்களுக்காக திறந்த மனதுடன் இருப்பதாகவும், கல்வி நிறுவனங்கள் திறந்தே வைத்திருப்பதாகவும் கூறியுள்ளதுடன் மாணவர்கள் விருப்பப்பட்டால் பாகிஸ்தானில் கல்வி உதவித்தொகையுடன் கல்வியை தொடரலாம் என அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை கண்டித்துள்ள இந்தியா, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும், கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்எறிய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது, என இந்தியாவிற்கான வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் சையத் அக்பருதீன் வெளியி்ட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை தெரிவி்ததுள்ளார்.