கோலாலம்பூர், மார்ச் 9 – காணாமல் போன MH370 விமானத்தில் இருந்த 239 பேரின் நிலை என்ன? என்று கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் சிஎன்என் போன்ற பல முக்கிய இணைய ஊடகங்களில் உலா வருகின்றன.
காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளின் பெயர் பட்டியலை, மாஸ் ஏர்லயன்ஸ் நிறுவனம் தங்களது அகப்பக்கத்தில் வெளியிட்டது.
ஆனால் அப்பட்டியலில் உள்ள இரண்டு பயணிகள் அவ்விமானத்தில் தாங்கள் பயணம் செய்யவில்லை என தங்களது சொந்த நாட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த இருவரில் ஒருவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
பட்டியலில் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், தற்போது அந்நாட்டில் நலமாக உள்ளதாகவும், அவர் அவ்விமானத்தில் பயணிக்கவே இல்லை என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த நபரின் பாஸ்போர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடு போய்விட்டது என்றும் ஆஸ்திரியா அறிவித்துள்ளது.
அதே வேளையில், இத்தாலியைச் சேர்ந்த மற்றொரு நபர், தற்போது தாய்லாந்தில் நலமாக உள்ளதாக தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தாலி அரசாங்கமும் தங்கள் நாட்டைச் சேர்ந்த யாரும் அவ்விமானத்தில் பயணம் செய்யவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
இவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அப்படியானால், இந்த இருவரின் தொலைந்து போன பாஸ்போர்ட்டை வைத்து, விமானத்தில் பயணம் செய்த அந்த இருவர் யார்? என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மலேசியா தரப்பில், தங்களுக்கு இந்த விபரம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் விசாரணைக்கு பின்பே எதையும் உறுதியாகக் கூற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.