புதுடெல்லி, மார்ச் 10 – ஆம் ஆத்மி கட்சியுடனான ரகசிய உறவு காங்கிரஸ் கட்சிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஊக்குவித்து வருகிறது. இது தவறான செயல். பா.ஜ.க. ஆதரவு தொகுதிகள் வலுவாக உள்ளது மற்றும் விரிவடைந்து வருகிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. அதனால் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை விமர்சிக்காமல், பா.ஜ.க. மற்றும் மோடிக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கியுள்ளார். தான் செய்யாததை ஆம் ஆத்மி செய்கிறது என அக்கட்சியை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது.
காங்கிரசின் தந்திரம் அவர்களின் வெற்றிக்கு உதவாது. பா.ஜ.க, ஆம் ஆத்மி இடையிலான தேர்தல் சண்டை மீதுதான் ஊடகங்களின் கவனமுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை விட அதிகமான ஓட்டு வங்கியுள்ளது. ஆனால் ஊடகங்களில் காங்கிரசை விட ஆம் ஆத்மி கட்சி அதிக இடம் பிடிக்கிறது.
இதனால் பா.ஜ.வுக்கு ஆதரவு இல்லாத இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இடது சாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ் வாடி போன்ற கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.