மார்ச் 10 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் போலி கடப்பிதழ் மூலம் பயணம் செய்துள்ள இருவர் குறித்த தகவலைக் கூற உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (Department of Civil Aviation – DCA) தொடர்ந்து மறுத்து வருகின்றது.
இன்று மதியம் கேஎல்ஐஏ வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இருவர் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற டிசிஏ தலைவர் அஸாருதின் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார்.
“அந்த இரு பயணிகள் குறித்து எங்களால் தகவல் எதையும் வெளியிட முடியாது. விசாரணை நடைபெற்று வருகின்றது. அந்த தகவலை நான் தெரிவித்தால் பின்னர் அது விசாரணைக்கு பெரும் தடையாகவும், ஆபத்தாகவும் முடியும்” என்று அஸாருதின் தெரிவித்தார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த லுய்கி மரால்டி மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் கோஸெல் ஆகிய இருவரின் பெயரும் மாஸ் நிறுவனம் வெளியிட்ட பயணிகளின் பெயர் பட்டியலில் காணப்பட்டது.
ஆனால், அவர்கள் இருவரும் அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றும், ஒரு வருடத்திற்கு முன்னால் அவர்கள் இருவரும் கடப்பிதழை தொலைத்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கங்கள் அறிவித்தன.
தற்போது தாய்லாந்தில் இருக்கும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த லுய்கி மரால்டியும் அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு தான் நலமாக இருப்பதாகத் தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களுக்குப் பதிலாக விமானத்தில் பயணம் செய்த அந்த இருவர் யார் என்று முழு விசாரணை நடைபெற்ற பின்னரே அறிவிக்க முடியும் என்று அஸாருதின் தெரிவித்துள்ளார்.
சந்தேகப்படும் அந்த இருவரின் புகைப்படங்களையாவது வெளியிடலாமே என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அஸாருதீன், “இது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பின்னரே கருத்து கூற முடியும்” என்று தெரிவித்தார்.