சென்னை, மார்ச் 11 – இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியினை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று யஷ்வந்த் சின்கா கூறினார். சென்னை எழும்பூரில், மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த சின்கா, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு துணை நின்றது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான்.
அந்த இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது பாவச்செயல். இலங்கை இனப் படுகொலைக்கு இந்திய கடற்படையும் ஒரு காரணம். பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுக் கொள்கையை பலவீனமாக கையாள்கிறார்.
வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டுடன் இருந்திருந்தால் தமிழக மீனவர்கள் தினசரி தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்காது. மீனவர்களின் பிரச்சனையை இந்தியா சரியாக கையாளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மத்தியில் நிலையான ஆட்சியை கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் சமநிலையை கொண்டுவர முடியும். மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமையும் போது மீனவர்கள் பிரச்சனைக்கும், இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்றார் யஷ்வந்த் சின்கா.