டெல்லி, மார்ச் 11 – தமிழ்நாட்டில் இப்போதைக்கு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை, ஆதலால் தனித்து போட்டியிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 16-வது நாடாள்மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அமைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பான்மையான தமிழக கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான முடிவை அறிவித்து விட்டன.
சில கட்சிகளுக்கு மட்டுமே இழுபறி நிலையில் காணப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இம்முறை காங்கிரஸ் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு முன்வரவில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த தி.மு.க. கடந்த ஆண்டு இறுதியில் கூட்டணியில் இருந்து விலகியது. காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்தித்தும், தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடப்போவதாக மறைமுகமாக காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், ‘தமிழ்நாட்டில் இப்போதைய நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.