கோலாலம்பூர், மார்ச் 11 – மாயமான MH370 விமானம் கடைசியாக புலாவ் பேராக் அருகே சென்றதாக இராணுவ ரேடாரில் பதிவாகியுள்ளதால் மலாக்கா கடற்பகுதிக்கு வடக்கே தேடும் படலம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
பட்டர்வொர்த்தில் உள்ள இராணுவ ரேடார் கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ள ரேடார் பதிவின் அடிப்படையில், MH370 விமானம் கோத்தா பாருவிற்குப் பிறகு மேற்கே திரும்பி கிழக்கு கடற்கரை மற்றும் கெடாவை கடந்து சென்றுள்ளது என விமானப் படை தலைவர் ரோட்ஸாலி டாவுட் தெரிவித்துள்ளார்.
கடைசியாக அதிகாலை 2.40 மணியளவில் புலாவ் பேராக் அருகே விமானம் பறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ரோட்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், விமானம் திரும்புகையில் அதன் வழக்கத்திற்கு மாறாக 10,000 மீட்டர் உயரத்தில் இருந்து தாழ்ந்து 1,000 மீட்டரில் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளதாகவும் இராணுவ ரேடாரில் கண்டறியப்பட்டுள்ளது.