ஆமதாபாத், மார்ச் 13 – உங்களைப்போல் நானும் தேர்வை எதிர்கொண்டுள்ளதாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாணவர்களிடம் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை துவங்குகின்றன.
இந்நிலையில், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆச்சர்யப்படும் வகையில் குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அப்போது மோடி கூறியதாவது, மாணவர்களே, நண்பர்களே, உங்களைப்போல் நானும் தேர்வை எதிர்கொண்டுள்ளேன். என்னைப்போல் நீங்கள் தேர்வைக் கண்டு கவலை கொள்ள வேண்டாம். நமது வாழ்க்கையில் தேர்வு என்பது இயற்கையானது. இதனை நாம் கடின உழைப்புடன் எதிர்கொண்டு நல்ல முடிவை பெற வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு, உங்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முயற்சி காரணமாக நல்ல முடிவு கிடைக்கும் என கூறினார்.
மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது என பெற்றோர்கள் கூறியுள்ளனர். மோடியின் இந்த செயலும், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தான் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.