கோலாலம்பூர், மார்ச் 14 – மாயமான மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டு வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்டதற்குக் காரணம் தொழில்நுட்பக் கோளாறு அல்ல என்றும், யாரோ ஒருவர் வேண்டுமென்றே அதை நிறுத்தியிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகித்துள்ளதாக ‘ஏபிசி செய்தி’ கூறுகின்றது.
விமானத்தை தகவல் அறிக்கை தொடர்பு (data reporting system) சரியாக 1.07 மணிக்கும், Transponder என்று அழைக்கப்படும் தகவல் செலுத்தும் கருவி 1.21 மணிக்கும் நிறுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன் படி, விமானிகள் அறைக்குள் யாராவது அத்துமீறி புகுந்தோ அல்லது விமானியை மிரட்டியோ அதை நிறுத்தியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கிப்பதாக பிரபல ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
விமானியைத் தவிர வேறு யாராவது அவ்வாறு செய்ய வேண்டுமானால் விமான தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
“விமானம் தனது பாதையில் இருந்து திரும்பியதாக கூறப்படும் அதே வேளையில், அதன் தகவல் தொடர்பு சாதனங்களை யாரோ வேண்டுமென்றே நிறுத்தி, தனது கட்டுப்பாட்டில் விமானத்தை கொண்டு வந்திருக்கலாம்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த விமான விபத்து நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்று உறுதியானால், விமானத்தில் பயணம் செய்த ஒட்டுமொத்த பயணிகளின் பெயர் பட்டியலின் அடிப்படையில், அவர்களில் விமான தொழிநுட்பமோ அல்லது இயக்கமோ நன்கு தெரிந்தவர் யார்? என அவர்களின் கல்விப் பின்னணியை ஆராய்ந்தால் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க ஏதாவது வழி பிறக்கலாம். செய்வார்களா மலேசிய அதிகாரிகள்?