பாரீஸ், மார்ச் 18 – நாட்டின் பாதுகாப்புக்காகவும், மற்ற நாடுகள் திடீர் தாக்குதல் நடத்தும்போது அவர்களை எதிர்கொள்ளவும் பல நாடுகள் ஆயுத இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவும் பல நாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.
இதற்கிடையே, பல்வேறு நாடுகளின் ஆயுத இறக்குமதி குறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் நிலை குறித்து கூறப்பட்டுள்ளது.
2009-2013 இடைப்பட்ட 5 ஆண்டு காலத்திலும், அதற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, உலக நாடுகளிடையே ஆயுத விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இறக்குமதியை பொருத்தவரையில், இந்த காலக்கட்டத்தில் இந்தியா அதிகளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளது.அதாவது உலக நாடுகளின் ஆயுத இறக்குமதியில், இந்தியாவின் பங்கு 7ல் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு 2009- 13-ஆம் ஆண்டில், அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடு ரஷ்யா.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 75 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. நவீன காலத்துக்கேற்ப ஆயுதங்களைப் பெற்று வரும் இந்தியா, தற்போது ரஷ்ய ஆயுதங்கள் வழங்கியதன் மூலம், இந்தியாவின் நட்பு நாடாக மாறியுள்ளது ரஷ்யா.
ரஷ்யாவை தவிர்த்து, மற்ற நாடுகளிடம் இருந்து மிகவும் குறைந்த அளவே இந்தியா ஆயுதங்களை வாங்கியுள்ளது. உலகத்திலேயே ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்து மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களை சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் பிடித்துள்ளன என ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.