திருப்புத்தூர், மார்ச் 18 – காங்கிரஸ் ஆட்சியில், சில நேரம் தவறு நடந்திருக்கலாம். அப்போதெல்லாம் தலையில் கொட்டினீர்கள். அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை என, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில், நிதியமைச்சர் சிதம்பரம் பேசினார்.
பிள்ளையார்பட்டியில், கற்பக விநாயகரை தரிசித்து, பிரசார கூட்டத்தை துவக்கிய சிதம்பரம் பேசியதாவது, திருமயம் தேர்தல் அலுவலகத்தில் இருந்து, பிரசாரத்தை துவக்கி விட்டோம். வேட்பாளர் அறிவிக்காமலேயே, பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
நாட்டில், 35 வயதிற்கு உட்பட்டவர்கள், 35 கோடி பேர். எனவே, இளைஞர்களின் பிரதிபலிப்பு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இருக்கும். வேட்பாளர், இளைஞராக இருக்க வேண்டும். யாரை வேட்பாளராக அறிவித்தாலும், இங்கு நான் தான் வேட்பாளர் என்பது உங்களுக்கு தெரியும்.
நடக்க இருப்பது, பஞ்சாயத்து தேர்தல் அல்ல. நாடாளுமன்றத் தேர்தல். இதில், அ.தி.மு.க. – தி.மு.க. இடையே போட்டி இல்லை. பா.ஜ.க – காங்கிரஸ் மூன்றாவது அணி எதிலுமே, தி.மு.க., சேரவில்லை. பிறகு எப்படி டில்லி ஆட்சியில் பங்கேற்க முடியும்? 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அவர்கள் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க. பிரசாரத்தில் முதல் 10 நாட்கள் நான் தான் பிரதமர் என, ஜெயலலிதா கூறினார். பிறகு நாங்கள் மத்திய ஆட்சியில் பங்கேற்போம்’ என்கிறார். ஜெயலலிதா பிரதமர் என, அ.தி.மு.க. தொண்டர்கள் தான் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர்.
அவர், காங்கிரசை வன்மையாக சாடுகிறார். அப்படியானால், பா.ஜ.க ஆட்சியில் பங்கேற்பரா? எனவே, டில்லியிலும் அ.தி.மு.க.வின் ஆட்சி நிச்சயமாக கிடையாது. எனவே காங்கிரஸ் – பா.ஜ.க இடையே தான் போட்டி. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால்,
தலித், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆதரவு இருக்குமா? 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவை தொடரும் என்ற நம்பிக்கை இல்லை. இதைத் தவிர்க்க, காங்கிரஸ் ஆட்சி தொடர வேண்டும் என நிதியமைச்சர் சிதம்பரம் பேசினார்.