மாலத்தீவு, மார்ச் 19 – மலேசிய விமானம் MH370 மாயமான அன்றைய நாளில், மாலத்தீவில் உள்ள குடஹுவாதூ தீவில் வசிக்கும் மக்கள் சிலர் தங்களது பகுதியில் மிகத் தாழ்வாக விமானம் ஒன்று பறந்து சென்றதாகக் கூறியுள்ளனர்.
இந்த தகவலை அந்நாட்டைச் சேர்ந்த நீண்ட கால பத்திரிக்கையான ‘ஹவீரு’ வெளியிட்டுள்ளது.
மார்ச் 8 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ‘வெள்ளை நிறத்தில் சிவப்பு பட்டை’ கொண்ட விமானத்தை பார்த்ததாக அத்தீவில் வசிக்கும் மக்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது MH370 ரேடார் தொடர்பில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் விலகிய பின், கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து, வடக்கிலிருந்து தென் கிழக்கு வழியாக அத்தீவின் அட்டு நகரை கடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
விமானத்தைப் பார்த்தவர்களின் ஒருவர் கூறுகையில், “இவ்வளவு தாழ்வாக ஒரு விமானம் பறந்து சென்றதை நான் இதுவரை பார்த்ததில்லை. கடலில் விமானங்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த விமானம் அந்த வகையை சேர்ந்தது கிடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
அந்த விமானம் செல்லும் போது ஏற்பட்ட பலத்த சத்தத்தை கேட்டு, வீட்டுக்குள் இருந்த மக்கள் பலர் வெளியே வந்து பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மக்கள் தன்னிடம் வந்து கூறியதாகவும், தீவில் அந்த நேரத்தில் விமானம் பறப்பது வழக்கத்திற்கு மாறானது என்றும் குடஹுவாதூ தீவின் கவுன்சிலர் முகமட் ஸாஹீம் தெரிவித்துள்ளதாக ‘ஹாவீரு’ தெரிவித்துள்ளது.