புதுடெல்லி, மார்ச் 20 – பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி மக்களின் முடிவை கேட்டு வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த தொகுதியில் மோடியை எதிர்த்து களம் இறங்கப்போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியது, காங்கிரசில் வேட்பாளர்களுக்கு என்ன பஞ்சமா?
காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பெயரை உரிய நேரத்தில் அறிவிக்கும். மோடியை எதிர்க்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்கமாட்டோம். வாரணாசி தொகுதிக்கு பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ் வலுவான வேட்பாளரை களமிறக்கும். முழு வலிமையோடு அங்கு போட்டியிடுவோம்.
கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு ஆதரவு தரமாட்டோம். காங்கிரஸ் தனது சுய பலத்தில் போட்டியிடும். மோடிக்கு ஒரு கடினமான போட்டியை ஏற்படுத்துவோம் என்று கூறினார் ஆனந்த் சர்மா.