மார்ச் 20 – இத்தனை நாட்களாக அனைத்துலகத்தின் அத்தனை பார்வைகளும் மையமிட்டிருந்த, காணாமல் போன விமானத்தைப் பற்றிய முதல் நம்பிக்கையான தகவலை ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றார்.
மலேசியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, விமானத்தைத் தேடும் வேட்டையில் இறங்கிய ஆஸ்திரேலியா கடற்பகுதி பாதுகாப்பு இலாகா, துணைக்கோளப் படங்களின் உதவியோடு காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்ட பொருட்கள் என நம்பப்படும் சிலவற்றை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடத்தை அடைந்து மேலும் அணுக்கமாக தேடுதல் வேட்டையில் இறங்க ஆஸ்திரேலிய இராணுவ விமானங்கள் தற்போது அங்கு விரைந்து கொண்டிருக்கின்றன என்றும் சிஎன்என் தொலைக்காட்சி அறிவித்தது.
அந்தப் பொருட்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் அல்லது அந்த விமானம் சம்பந்தப்பட்ட பொருட்கள் என நம்பும்படியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஆஸ்திரேலியா பிரதமர் அப்போட் கூறியிருக்கின்றார்.
ஆனால் இவை காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்டதுதானா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்
இதன் மூலம் விமானம் கிடைத்து விட்டது என்ற மன நிம்மதி அனைவருக்கும் எழும் என்றாலும், விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது என்பதுதான் கடந்த 10 நாட்களாக பரபரப்பான மர்மத் தொடர் போல நீண்ட இந்த விவகாரத்தின் சோகமான முடிவாகும்.