Home நாடு காக்பிட்டில் இருந்து ஸஹாரி கடைசியாக போனில் பேசியது யாருடன்? – அதிகாரிகள் விசாரணை

காக்பிட்டில் இருந்து ஸஹாரி கடைசியாக போனில் பேசியது யாருடன்? – அதிகாரிகள் விசாரணை

444
0
SHARE
Ad

Pilot.jpgகோலாலம்பூர், மார்ச் 21 – மலேசிய விமானம் MH370 மாயமாகி இன்றோடு 14 நாட்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் விமானம் இருக்கும் இடம் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

தெற்கே இந்தியப் பெருங்கடலில் விமானத்தின் பாகங்கள் போல் தென்பட்ட இரண்டு பொருட்களை ஆஸ்திரேலிய துணைக் கோள் படம் படித்து அனுப்பியதைத் தொடர்ந்து, அந்த கடல் பகுதியில் நேற்று முதல் தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க, விமானம் மாயமானதற்கு காரணம் என்னவாக இருக்கும் என விசாரணை அதிகாரிகள் பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மார்ச் 8 ஆம் தேதி, அதிகாலை 12.41 மணியளவில், விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷா விமானிகள் அறையில் இருந்து யாருடனோ பேசியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் இறுதியாக யாருடன் பேசினார் என்பதை கண்டறிந்தால், விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்த விசாரணை குறித்து மலேசிய அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை 12 விமானப் பணியார்கள் மற்றும் 227 பயணிகள் மீது எந்த ஒரு தவறான கண்ணோட்டமும் வைக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஸஹாரியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிமுலேட்டரில், அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சில தகவல்களை மீட்டெடுக்க, அதிகாரிகள் அமெரிக்க புலனாய்வுத்துறையின் உதவியை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.