மார்ச் 21 – உலகில் சுமார் 7 பில்லியன் மக்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் திறன்பேசிகளிலுள்ள இணையப் பயன்பாடுகள் பற்றி தெரிந்து இருந்தாலும் கூட, அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்துவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு, நட்பு ஊடகமான பேஸ்புக், திறன்பேசிகள் பயன்படுத்தும் அனைவரும் அடிப்படையான இணைய வசதிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த சேவையை இலவசமாக கொடுக்க திட்டமிட்டு வருகின்றது.
இது குறித்து பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், “அடிப்படையான இணைய வசதிகளைப் பற்றித் தெரியாத மக்களுக்கு, இணையம் மூலம் நடக்கும் பல ஆயிரம் டாலர்களுக்கான வணிகம் பற்றி தெரிவதில்லை. அத்தகைய மக்களுக்கு இணையத்தை அறிமுகப்படுத்துவதில் பேஸ்புக் ஆர்வம் காட்டிவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் குறித்து திறன்பேசிகளுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.