Home நாடு “நான் உறுதியாகச் சொல்கிறேன்… கடலில் விமானம் மிதந்ததைப் பார்த்தேன்” – பெண்மணி புகார்

“நான் உறுதியாகச் சொல்கிறேன்… கடலில் விமானம் மிதந்ததைப் பார்த்தேன்” – பெண்மணி புகார்

775
0
SHARE
Ad

MH370மலாக்கா, மார்ச் 21 – விமானம் ஒன்று கடலில் மிதந்ததை தான் பார்த்ததாக ஜோகூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என ‘ஸ்டார்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி, தனது மெக்கா பயணம் முடிந்து, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக் கொண்டிருந்த வேளையில்,இந்தியப் பெருங்கடல் மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கடலில் வெள்ளை நிற பொருள் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை தான் பார்த்ததாக அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ராஜா டாலேலா ராஜா லத்திபா (வயது 53) என்ற அந்த பெண்மணி கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“நான் ஜெட்டாவில் இருந்து அதிகாலை 3.30 மணியளவில்(மலேசிய நேரப்படி காலை 8.30) புறப்பட்ட  SV2058 விமானத்தில் பயணம் செய்தேன். விமானம் தமிழ்நாட்டின் சென்னையை கடந்து பறந்து கொண்டிருந்த போது, பெரிய வெள்ளை நிற பொருள் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்தது”

“அது என்ன பொருள் மீண்டும் உற்றுப் பார்க்கும் போது, அது விமானத்தின் இறக்கை மற்றும் வால் பகுதி போல் தெரிந்தது. நான் மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்த போது அது விமானம் தான் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என் அருகில் இருந்த நண்பர்களிடம் அதை கூறிய போது அவர்கள் சிரித்தனர்.”

“அங்கிருந்த விமானப் பணியாளர்களிடம் கூறிய போது, ஜன்னலை மூடிவிட்டு என்னை தூங்கும் படி கூறினர். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு கோலாலம்பூர் வந்தவுடன் தான், அன்று மாஸ் விமானம் காணாமல் போன செய்தி எனக்கு தெரியும்”

“நான் பார்த்த தகவலை காவல் துறையில் பணி புரியும் எனது மருமகனிடம் கூறிய போது, அவர் என்னை அன்றே காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று புகார் அளிக்க வைத்தார். ஆனால் அன்றைய நாளில் சீன கடல் பகுதியில் விமானத்தை தேடிக் கொண்டிருந்தார்கள். நான் தவறான தகவல் கொடுக்கிறேன் என்று என்னை கைது செய்வார்கள் என்று என் பிள்ளைகள் பயந்தார்கள்”

“ஆனால் அதற்கு அடுத்த வாரத்தில், இந்திய பெருங்கடலில் விமானத்தை தேட ஆரம்பித்தார்கள். அப்போது தான் நான் கூறியதில் உண்மை இருப்பதாக உணர்ந்த என் உறவினர்கள் என்னை நம்பினார்கள். அதன் பிறகு செந்தூல் காவல்நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் அளித்தேன்”

“நான் உண்மையை தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை. இப்போது தான் புனித பயணம் முடித்து திரும்பியிருக்கிறேன். நான் என்ன பார்த்தேன் என்று நன்றாகத் தெரியும்… அது விமானமே தான்… சரியாக காலை 9.30 (மலேசிய நேரம் மதியம் 2.30 மணி)” என்று ஆணித்தரமாக ராஜா டாலேலா கூறியுள்ளார்.

எனினும், கடற்பரப்பில் இருந்து 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் வேளையில், எப்படி அவரால் அவ்வளவு தெளிவாகப் பார்த்திருக்க முடியும் என்று விமானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.