நியூயார், மார்ச் 22- அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற மனித உரிமை அமைப்பின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது நியூயார்க்கின் புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் .
இந்த வழக்கில் கூறப்படுவதாவது, “கடந்த 1984 -ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது.
நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு சோனியா காந்தியும் உடந்தையாக இருந்தார் எனக் கருதி அந்த அமைப்பினர், சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு இழப்பீடு கேட்டு, கடந்த ஆண்டு வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பிரைன் கோகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன் சோனியாவிடம் வழங்கப்படவில்லை என்றும் சம்மன் வெளியிட்ட நேரத்தில் சோனியா காந்தி அமெரிக்காவில் இல்லை என்றும்,
அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சோனியாவின் வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்காத நீதிபதி கோகன், குறிப்பிட்ட நாட்களில் சோனியா அமெரிக்காவில் இல்லை என்பதை நிரூபிக்க
அவரது பாஸ்போர்ட் நகலை, ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.