மதுரை, மார்ச் 24 – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அவர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது. திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் அழகிரி.
அதன் பின்னர் தனிக் கட்சியோ எதுவுமே தொடங்கவில்லை. ஆனால் திமுகவினர் எதிர்பாராத வகையில் பல்வேறு வேலைகளை அதிரடியாகச் செய்யத் தொடங்கினார் அழகிரி. பிரதமர் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் சந்தித்தார்.
தென் தமிழகத்தில் திமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்கும் வகையில் அவர் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திமுகவினர் யாரும் அழகிரியைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்று கூறி எச்சரிக்கை அறிக்கைவிட்டார். ஆனால் இந்த செயல்பாட்டுக்கெள்ளாம் நான் பயப்பட மாட்டேன் என்று பதிலடி கொடுத்தார் அழகிரி.
இந்த நிலையில் இடையில் அவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தற்செயலாக விமானத்தில் வைத்து சந்தித்தார். அப்போது இருவரும் மனம் விட்டுப் பேசியுள்ளனர். இதுகுறித்து அழகிரியே குறிப்பிடுகையில், பழைய நட்புடன்தான் இருக்கிறார் வைகோ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு வைகோ போனார். அங்கு அழகிரியைச் சந்தித்துப் பேசினார். இருவரும் மனம் விட்டுத் தனியாக பேசினர். மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு அப்போது அழகிரியிடம் வைகோ கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. மதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
அழகிரியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரி ஆதரவாளர்கள் பாஜக மற்றும் மதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது.
அதேசமயம், தேமுதிகவுக்காக அழகிரி பணியாற்ற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. வைகோ, விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் வைகோவின் தோல்விக்கு அழகிரியும் ஒரு முக்கியக் காரணம் என்று பேச்சு அடிபட்டது நினைவிருக்கலாம்.
ஆனால் இந்த முறை வைகோவுக்காக அழகிரியே நேரடியாக களம் இறங்கி வேலை பார்க்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகோவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் ரத்தினவேலு, ஒரு காலத்தில் தீவிர அழகிரி ஆதரவாளர் என்பது நினைவிருக்கலாம்.