பாகிஸ்தான், மார்ச் 24 – பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கடுமையான மின்தட்டுப்பாட்டைப் போக்க, இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. பாகிஸ்தானில் போதிய மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால், அதன் உற்பத்தி திறன் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது,
இதனைப் போக்க ஈரான் நாட்டிலிருந்து, நாளொன்றுக்கு 35 மெகா வாட் மின்சாரத்தைப் பெற்று வந்தாலும், அதுபோதுமானதாக இல்லாத காரணத்தினால், உலக வங்கியின் வழிகாட்டுதலின் பேரில், இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைப் பெற, பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறியதாவது, “இந்தியாவிலிருந்து 1200 மெகா வாட் மின்சாரத்தைப் பெற, பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது, விரைவில் மின்சார வழித்தடங்கள் அமைப்பதற்கான திட்டப்பணி மற்றும் அதற்கு ஆகும் செலவுகள் குறித்து அறிய மதிப்பீட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். .
மேலும் முதல் கட்டமாக 500 மெகாவாட் மின்சாரத்தை பெற, பாகிஸ்தான் ஆயத்தமாகி வருகிறது. வரும் 2016-ஆம் ஆண்டில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழகம் போன்ற தென்பகுதிகளில் கடுமையான மின்தட்டுப்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.