கோலாலம்பூர், மார்ச் 24 – மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.
நஜிப் கூறியதாவது:-
“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.”
“பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் (Air Accidents Investigation Branch – AAIB), அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விமானம் சென்ற பாதையை கண்டறிந்ததில், இறுதியாக விமானம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்து இந்தியப் பெருங்கடலின் நடுவே முடிவடைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சோதனையை அவர்கள் இதற்கு முன் செய்தது இல்லை”
“பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகவும் சோகத்துடனும், வருத்தத்துடனும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.