புதுடில்லி, மார்ச் 25 – தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான, நாகார்ஜுனா, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆமதாபாத்தில் நேற்று சந்தித்து பேசினார். எனினும், அவர் அரசியல் பேசவில்லை என தெரிவித்தார்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை, கடந்த வாரம் சந்தித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், பா.ஜ.க.வில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவன் கல்யாண், பா.ஜ.க.வில் இணைந்தது, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுன் நேற்று குஜராத் மாநிலம், ஆமதாபாத் சென்று, முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இவர் மனைவி, நடிகை அமலாவும் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக, நாகார்ஜுனாவுக்கு நெருக்கமான தகவல்கள் முன்னர் தெரிவித்தன. மோடி சந்திப்பிற்கு பின், நிருபர்களை சந்தித்த நாகார்ஜுன், நான் பா.ஜ.க.வில் இணையப்போவதில்லை.
மாநில வளர்ச்சி குறித்தும், குஜராத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், மோடியுடன் பேசினேன் என்றார். சட்டசபை தேர்தலுடன் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ளது ஆந்திரா.
நடிகர் நாகார்ஜுன், தெலுங்கு படவுலகின், பழம்பெரும் நடிகர். நாகேஸ்வர ராவின் மகன். நாகார்ஜுன், தன் முதல் மனைவி, லட்சுமியை விவாகரத்து செய்து, நடிகை அமலாவை, 1992-ல் மணந்தார்.