Home நாடு செல்லியல் பார்வை: MH 370 – சோக முடிவிலும் தொடரும் குழப்பங்களுக்கு விடை காண...

செல்லியல் பார்வை: MH 370 – சோக முடிவிலும் தொடரும் குழப்பங்களுக்கு விடை காண அரச ஆணைய விசாரணைக் குழு அமைய வேண்டும்!

489
0
SHARE
Ad

26acdcea4bd29e1f9c247a3618b68518மார்ச் 25 – காணாமல் போன விமானத்தின் இறுதிப் பயணம், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் “முடிவுக்கு” வந்தது – பயணிகள் யாரும் உயிர் பிழைக்கவில்லை – என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, நீண்டு கொண்டே போன இந்த விவகாரம் ஒரு சோக முடிவுக்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பயணிகளின் உறவினர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் இந்த விவகாரத்தில் நமது மூளையைக் கிறுகிறுக்கச் செய்யும் குழப்பங்கள் – முடிச்சு அவிழ்க்க முடியாத மர்மங்கள் – இன்னும் தொடர்கின்றன என்பதுதான் உண்மை.

அடுத்து வரும் பல நாட்களுக்கு, ஏன் பல வாரங்களுக்குக் கூட தகவல் ஊடகங்களின் வாதப் பிரதிவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப் புள்ளி இல்லாமல் இந்த விவகாரம் நீண்டு கொண்டே போகும் என்பதில் ஐயமில்லை.

#TamilSchoolmychoice

இன்று நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முழுவிவரங்கள் வெளியிடப்படும் என பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார். இருப்பினும் அந்த விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்குமா அல்லது மேலும் புதிய கேள்விகளுக்கு இடமளிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்விகள் புதிது புதிதாக எழுந்து கொண்டே இருக்கின்றன.

MASவிமானம் எரிபொருள் தீர்ந்த நிலையில் கடலில் விழுந்ததா? அல்லது விபத்துக்குள்ளாகி விழுந்ததா?

கிளந்தான் பகுதியைத் தாண்டியதும் மேற்கு நோக்கி திடீரென விமானம் மேற்கு நோக்கித் திரும்பியது ஏன்?

அதன் பிறகு 12,000 அடி வரை விமானம் கீழிறங்கியது ஏன்?

இவ்வளவு நடந்தும் விமானிகளிடம் இருந்து எந்தவித தகவலும் வராததற்குக் காரணம் என்ன?

மீண்டும் விமானம் மலேசியப் பிரதேசத்தைத் தாண்டி பறந்துள்ளதா? அப்படியென்றால், நமது நாட்டின் ராடார் கருவிகள் ஏன் அதனை கண்டு பிடிக்கவில்லை?

MH370 (2)ராடார் கருவிகளின் கோளாறா? அல்லது விமானியின் திறமையா? இல்லை விமானம் மீண்டும் மலேசியப் பிரதேசத்திற்குள் நுழையவே இல்லையா?

சம்பந்தமில்லாத ஆஸ்திரேலியா தாண்டிய கடல் பகுதிக்குள் விமானம் நுழைந்தது ஏன்? திசை மாறி சில மணி நேரங்கள் பறந்த நேரத்திலும் விமானத்தை யாருமே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டன அல்லவா?

விமானம் கீழே கடலில் இருந்ததைப் பார்த்ததாக ஒரு பெண்மணி காவல் துறையில் புகாரே செய்திருந்தும், அதனை பல நாட்களுக்கு சம்பந்தப்பட்ட புலன் விசாரணைக்கு கொண்டு வராத காவல் துறையினரின் மெத்தனத்திற்கு யார் பதில் சொல்வது?

பயணிகளின் சில பொருட்கள் விமானத்தில் இருந்து வெளியே இறக்கி வைக்கப்பட்டன என்று ஒரு தரப்பும் அப்படி இல்லையென்று காவல் துறையும் சொன்னது ஏன்?

இரண்டு பயணிகள் திருட்டு கடப்பிதழ்களுடன் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது? குடிநுழைவுத் துறையினரின் இந்த பலவீனத்திற்கு அல்லது ஊழலுக்கு யார் பதில் சொல்வது?

லித்தியம் மின்கலம் (பேட்டரி) உண்மையிலேயே விமானத்தில் ஏற்றப்பட்டதா? இதனால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டா?

இப்படியாக இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தவர்களிடத்தில் தொக்கி நிற்கும் – விடை காண முடியாத – கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

இன்று, நடைபெறப் போகும் பத்திரிக்கையாளர் விளக்கக் கூட்டத்தில், இது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? அல்லது மேலும் குழப்பங்களும், சந்தேகங்களும்தான் மிஞ்சுமா?

நஜிப் அரசாங்கம், இனியும் பல விவகாரங்களை மூடி மறைக்காமல் – அல்லது மூடி மறைக்கின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் – முறையான விசாரணைகளைத் தொடங்கி எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.

சீன அரசாங்கமும், பயணிகளின் உறவினர்களும் மலேசியா அரசாங்கம் திறந்த போக்குடன் நடந்து கொள்ளவில்லை என்றும் பல விஷயங்களை மூடி மறைக்க முயல்கின்றது என்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசாங்கம் இது குறித்து அரச ஆணைய  விசாரணைக் குழு ஒன்றை நியமித்து, முழுமையான – எதையும் மூடி மறைக்காத – விசாரணையைத் தொடக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறுகள் அடையாளம் காணப்பட வேண்டும். யார் அவற்றைச் செய்திருந்தாலும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். சில தலைகள் உருளத்தான் வேண்டும்.

அப்போதுதான், இன்றைக்கு மிகவும் கீழ் நிலைக்குப் போய்விட்ட மலேசிய நாட்டின் – அரசாங்கத்தின் – தோற்றமும், நற்பெயரும் உள்நாட்டில் மட்டுமல்ல – உலக அரங்கிலும் காப்பாற்றப்படும்.

அது மட்டுமல்ல! அப்போதுதான் –

இதுபோன்ற அசம்பாவிதங்களின் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பல இன்னுயிர்களை – நமது சொந்தங்களை – நண்பர்களை நாம் இழக்க வேண்டிய அவலமும் மீண்டும் நேராமல் தடுக்கவும் முடியும்.

-இரா.முத்தரசன்