மார்ச் 25 – முன்னாள் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவின் புதல்வர் சா.வேள்பாரியை, அவரது தந்தையின் பதவி விலகலுக்குப் பின்னர் அடுத்து வந்த தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் ம.இ.கா மத்திய செயலவையின் நியமன உறுப்பினராகவும் கட்சியின் வியூக இயக்குநராகவும் நியமித்தார்.
ஆனால், பின்னர் அவரே சில அரசியல் காரணங்களால் வேள்பாரியை மத்திய செயலவை பதவியிலிருந்து நீக்கினார். வியூக இயக்குநர் பதவியையும் அதனால் வேள்பாரி இழந்தார்.
பின்னர் ம.இ.கா தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்த வேள்பாரி பின்னர் அந்தப் போட்டியிலிருந்தும் விலகினார். கெப்போங் ம.இ.கா. தொகுதியின் தலைவராக மட்டுமே தனது பதவியில் வேள்பாரி தொடர்ந்தார்.
தொடர்ந்து தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு எதிராக அறிக்கை ஒன்றை விடுத்தார் என்ற காரணத்துக்காக வேள்பாரிக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் காரணம் கோரும் கடிதத்தை ம.இ.கா ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவருக்கு அனுப்பியது.
தான் அந்தக் கடிதத்திற்கு முறையான பதிலையும் அனுப்பி விட்டதாகவும், இனி முடிவெடுக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என்றும் வேள்பாரி கூறியிருக்கின்றார்.
மீண்டும் வியூக இயக்குநராக…
இந்நிலையில் ம.இ.கா. வியூக இயக்குநராக வேள்பாரி மீண்டும் பழனிவேலுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
“பழனிவேலுவை நான் நான் கடந்த புதன்கிழமை சந்தித்தேன். அவர் எனக்கு வியூக இயக்குநர் பதவியை மீண்டும் தருவதாகக் கூறினார். நானும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டுள்ளேன்” என்று வேள்பாரி கூறியதாக ‘ஸ்டார்’ நாளிதழ் இன்றைய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், மத்திய செயலவையின் நியமன உறுப்பினராக வேள்பாரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதன் மூலம் வேள்பாரிக்கும் பழனிவேலுவுக்கும் இடையில் நீடித்து வந்த பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகின்றது,