மார்ச் 27 – ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி, இந்த வார்த்தை முன்பு ஒரு முறை மதுரையில் நடந்த கட்சி மாநாட்டின் போது, திமுக தலைவர் கருணாநிதி தன் மகனை உச்சிமுகர்ந்து தெரிவித்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நடந்த தி.மு.க ஆட்சியின் போது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தி இருந்தாலும், திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றது. அது அ.தி.மு.க வையே அசைத்துப் பார்த்தது.
இந்த வெற்றியின் முழு பின்னணியில் இருந்தது மு.க.அழகிரி தான். தன் மகனை நினைத்து அகம்மகிழ்ந்து போன கருணாநிதி, தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி, அதில் அழகிரியை அமரச் செய்து அழகு பார்த்தார்.
இப்படி தி.மு.க வின் மாபெரும் சக்தியாக விளங்கிய அழகிரி, தற்போது அடிப்படை உறுப்பினர் என்ற பதவியிலிருந்து கூட தூக்கி எறியப்பட்டார். கட்சித் தலைமைக்கு அடிபணிய வில்லை, கட்சி விரோதப்போக்கை மேற்கொண்டார் என ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும், திரைமறைவிலிருந்து வேலைசெய்தது ஸ்டாலின் தான் என்பது அக்கட்சியிலுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ஆரம்ப காலங்களில் கட்சியில் எவ்வித தொடர்பும் இல்லாமல் தான் இருந்தார் அழகிரி. கடந்த 1993 ஆம் ஆண்டு தி.மு.க லிருந்து பிரிந்த வைகோ, மதிமுக வை ஆரம்பிக்க, பொன் முத்துராமலிங்கம் போன்ற தென்மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருத்தராக தி.மு.க லிருந்து விலகத் தொடங்கினர்.
இதனைத் தடுக்கும் விதமாக அனைத்து நிர்வாகிகளையும் அழகிரி ஒன்று சேர்த்தார். இது தான் முதன் முறையாக எல்லோர் மத்தியிலும் அவரை அடையாளப்படுத்தியது.
இந்நிலையில் உட்கட்சிப்பூசலால் தி.மு.க லிருந்து அழகிரி இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நீக்கத்திற்கு தொண்டர்களுக்கு இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால் மதுரை அரசியலுக்கு அழகிரி தேவை என்ற அடிப்படையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இதன் பின்னர் அழகிரியின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்தது. 2009 பது மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் தி.மு.க வின் வெற்றி, அழகிரியை தென் மாவட்டத்தின் அதிகார மையமாக மாற்றியது.
இதன் பின் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அழகிரி பேசப்பட்டார். அதுவரை அண்ணன், தம்பியாக பாசமழையில் நனைந்த இருவருக்குமிடையே விரிசல் உருவாகத் தொடங்கியது. இதனை கருணாநிதியும் கவனிக்காமல் இல்லை.மாநில அரசியலில் அழகிரியை தலையிடாமல் தடுக்கும் வண்ணம், மத்தியில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டார்.
ஆயினும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையில் அடிகடி மோதல் இருந்து வந்தது. இதன் உச்சமாக காங்கிரஸ் மீதான அதிருப்தி காரணமாக தி.மு.க அமைச்சர்கள் பதவி விலக, அழகிரியின் பதவியும் பரிபோனது.
அதே சமயத்தில், தனக்குப் பின் ஸ்டாலின் தான் கட்சியை கவனிப்பார் என்று கருணாநிதி அறிவிக்க, அறிவாலயத்தில் பிரளயமே வெடித்தது.ஸ்டாலினின் தலைமையை ஏற்க முடியாது என்றும், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் பத்திரிக்கைகளுக்கு நேரடியாகவே அழகிரி விமர்சனம் செய்தார்.
இதற்கிடையே அ .தி.மு.க ஆட்சிக்கு வர, அழகிரி மகன் துறை தயாநிதி மீது, கல்குவாரி ஊழல் வழக்குகள் பாயந்தன. மகனைக் காப்பற்றும் முயற்சியில் அழகிரி இருக்க, ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களை ஒவ்வொருவராக களை எடுத்தார்.
இதனைத் தட்டிக் கேட்ட அழகிரியை, ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசினார் என குற்றம் சாட்டி, தற்காலிக பணி நீக்கம் செய்தார் கருணாநிதி. அதன் பின்னும் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் மதிக்காத அழகிரி, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
கட்சிப் பதவிகளில் சேர்க்கப்படுவதும், பின்னர் நீக்கப்படுவதும் தி,மு.க வில் சகஜம் என்றாலும், சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதும் கருணாநிதி வாரிசுகளே என்பது பட்டவர்த்தனமான உண்மை.
இந்த அரசியல் கோமாளிகளின் இராஜதந்திரம், அடிப்படை வாக்காளனுக்குப் புரியுமா? என்பது கேள்விக்குறி தான்.
– செல்லியல் ஆசிரியர் குழு