கோலாலம்பூர், மார்ச் 31 – இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு விமானம் கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருந்தால், விமானத்தில் இருந்து அதிகமான பாகங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
சிஎன்என் செய்தி நிறுவனத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தலைமை செய்தியாளர் ஜிம் சியூட்டோ, கடல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பாபானின் மற்றும் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் மைல்ஸ் ஓப்ரியன் ஆகியோர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விமானம் கடற்பரப்பில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அவர்கள் வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரின் ஹுட்சன் ஆற்றில், அமெரிக்க விமானம் 1549 அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை சியூட்டோ மேற்கோள் காட்டினார்.
“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.