Home இந்தியா இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 1 – கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன்...

இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 1 – கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை தனயன் பிடிப்பாரா?

642
0
SHARE
Ad

Karti-Chidambaramமார்ச் 31 – தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காகவே, தானும் அரசியலுக்கு வரவேண்டும் என அலம்பல் பண்ணும், ஆனால், எந்தவித தலைமைத்துவ தகுதிகளும் இல்லாத தனயன்கள் பலரை தமிழ் நாட்டு அரசியல் களம் ஏற்கனவே பார்த்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

ஆனால், கல்வி, தலைமைத்துவ ஆற்றல், பேச்சுத் திறன், நவீன உலகமயமான சிந்தனைகள் என எல்லாத் தகுதிகளும் இருந்தும், தந்தையின் விஸ்வரூப ஆளுமையால் அரசியலில் தலைதூக்க முடியாமல் தவிக்கும் சிறந்த மகன்களும் உண்டு.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கார்த்தி சிதம்பரம்!

சிறந்த கல்வித் தகுதிகளும், பொது வாழ்க்கைப் பயணமும்…

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகப் பட்டப்படிப்பு; பின்னர் பிரிட்டனின் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பெற்றோர்கள் வழியில் சட்டத் துறை பட்டப்படிப்பு என சிறந்த கல்வித் தகுதிகள் ஒரு புறம்!

பொது வாழ்க்கையில், அகில இந்திய டென்பின் போலிங் விளையாட்டு மன்றத்தின் தலைவர், அகில இந்திய டென்னிஸ் விளையாட்டு மன்றத்தில் உதவித் தலைவர், தமிழ் நாடு டென்னிஸ் விளையாட்டு மன்றத்தில் உதவித் தலைவர், இப்படியாக பல பதவிகள், பொறுப்புகள்.

அரசியல் ரீதியாகவும் மிக இளம் வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினராக இடம் பிடித்தவர்.

அப்பாவின் நிழலிலும், பணத்திலும் குளிர் காயாமல் சொந்தமாகவே பலவிதமான வணிக முயற்சிகள் எடுத்து வெற்றியடைந்தவர்.

அப்பாவின் பிரபலம் என்ற நுழைவாயில் இருந்தாலும், பாரம்பரிய குடும்பப் பின்னணி இருந்தாலும், காலப்போக்கில் தனது சொந்த குண நலன்களால்,  தமிழ் நாட்டின் அனைத்து தரப்பட்ட பிரமுகர்களிடத்திலும் தனக்கென தனியான தொடர்புகளையும், நட்பு வட்டாரத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளவர் கார்த்தி.

ஆனால், இத்தனை சிறப்புகள் இருந்தும், தந்தை சிதம்பரம், காங்கிரஸ் அரசியலில் முக்கிய இடம் வகித்ததாலும், மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்தில் நீண்ட காலம் இருந்ததாலும், முன்னணிக்கு வர முடியாமல் இருந்த கார்த்திக்கு இப்போது முதல் முறையாக சிக்கலான தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

வெற்றி வாய்ப்புகள் எப்படி?

P-Chidambaram_71தந்தையின் அதே சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கார்த்தி. ஆனால், இந்த முறை எல்லாக் கட்சிகளுமே, தனித் தனியாக போட்டியில் இறங்கியிருக்கின்ற சூழ்நிலை.

அதிலும், காங்கிரஸ் கட்சிக்கோ, தமிழ் நாட்டில் இக்கட்டான சூழ்நிலை. ஒரு பக்கம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அந்தக் கட்சி எடுத்த தொடர் முடிவுகளால், தமிழ் நாட்டு வாக்காளர்களின் பலத்த அதிருப்தியை அந்தக் கட்சி சம்பாதித்திருக்கும் நேரம் இது.

போதாக்குறைக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்ததால், காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசாங்கத்தின் மீது கணிசமான தமிழக வாக்காளர்கள் எதிர்ப்புணர்வோடு இருக்கின்றார்கள்.

இவ்வளவையும் மீறி, கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வென்று வர முடியுமா என்பதைக் காண தமிழக அரசியல் ஆர்வலர்கள் ஆர்வமுடன் ஒரு புறம் காத்திருக்கின்றார்கள்.

இன்னொரு புறத்திலோ, கார்த்தி அப்படியே வென்று நாடாளுமன்ற உறுப்பினராக காலடி எடுத்து வைத்தால், காங்கிரசும் மத்தியில் அதிர்ஷ்டவசமாக ஆட்சி அமைத்தால், கார்த்தி மத்திய அமைச்சரவையில் கூட இடம் பெறலாம், தந்தை விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்னும் அளவுக்கு டில்லி வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பு  கூடியிருக்கின்றது.

இதனால், இந்த இந்தியத் தேர்தலில் அனைவராலும் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக கார்த்தி சிதம்பரம் தோற்றமெடுத்திருக்கின்றார்.

சாதக, பாதக அம்சங்கள்…

Karti with Sonia 300 x 200இளவயது, சிறந்த கல்வித் தகுதிகள், பேச்சாற்றல், தந்தையின் செல்வாக்கு, சிவகங்கை வட்டாரத்திற்கே உரிய நகரத்தார் சமூக ஆதரவு, பண பலம், காங்கிரசின் பாரம்பரிய வாக்குகள் – இவையெல்லாம் இந்த தேர்தலில் கார்த்திக்கு சாதகமான அம்சங்கள்.

சிதம்பரத்தின் மீது தனிப்பட்ட ஆத்திரத்தோடு செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் ஆத்திரம் – அது கார்த்தி மீதும் பாய்ந்து அவரையும் தோற்கடிக்க அவர் முனைப்பு காட்டலாம் என்ற நிலைமை; இலங்கைத் தமிழர் பிரச்சனையால் காங்கிரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் வாக்குகள், தனித் தனி கட்சிகளாகப் பிரிந்து நிற்பதால் வாக்குகள் சிதறும் சூழ்நிலை; வழக்கமாக காங்கிரசில் தொடரும் உள்கட்சி பின்னணி கீழறுப்புகள்; இவையெல்லாம் கார்த்திக்கு எதிராக வரிசை பிடித்து நிற்கும் அஸ்திரங்கள்.

வாக்குகள் தனித் தனி கட்சிகளுக்கும் பிரிவதால், தந்தை பல தவணைகள் அந்த தொகுதியில் உறுப்பினராக இருந்த காரணத்தால் இயல்பாகவே  கார்த்திக்கு இருக்கக் கூடிய சில அனுகூலங்கள், அவற்றோடு அவரது தனிப்பட்ட செல்வாக்கு இவற்றால் கார்த்திக்கு சற்றே கூடுதலாக வெற்றி வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

இருப்பினும் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமைக்காவிட்டாலும் சரி – இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன்வழி  தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்படத்தக்க ஓர் அரசியல்வாதியாக தடம் பதித்து விட்டார் கார்த்தி சிதம்பரம்!

-இரா.முத்தரசன்

(விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் பல வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் கவனிக்கப்படும் வேட்பாளர்களாகியுள்ளனர். அவர்களைப் பற்றிய பாரபட்சமற்ற, நடுநிலையான கண்ணோட்ட வரிசை இது. அடுத்தடுத்து மற்ற வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள்)