ஏப்ரல் 2 – 1960ஆம் ஆண்டுகளில் பிரபல திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த நேரம். அவர் முன் நடிக்க வாய்ப்பு கேட்டு, மெல்லிய உடலமைப்போடும், சிவந்த வண்ணத்தையும் கொண்டிருந்த அந்த ஐயங்கார் வீட்டுத் தமிழ்ப் பெண் வந்து நின்றாள்.
பரத நாட்டியத்தில் நல்ல திறமை கொண்டிருந்த அந்தப் பெண்ணை வைத்து பரிட்சார்த்த படப்பிடிப்பு நடத்திப் பார்த்த ஸ்ரீதர் அந்தப் பெண் தனது படத்திற்கு லாயக்கில்லை என்று நிராகரித்துவிட்டார்.
பின்னர்,‘இது சத்தியம்’ போன்ற ஓரிரு படங்களில் குழு நடனப் பெண்களில் பத்தோடு பதினொன்றாக நடித்தவரை அவரது தாயார் அழைத்துக் கொண்டு பம்பாய் பக்கம் போனார்.
இந்தித் திரையுலகம் அவரை வாரி அணைத்து சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. ஹேமமாலினியாக – இந்தித் திரையுலகின் கனவுக் கன்னியாக பல்லாண்டுகள் இந்திப் படவுலகையே கலக்கினார்.
லாயக்கில்லை எனத் தான் நிராகரித்த பெண், முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல், அகில இந்தியாவிலும் கனவுக் கன்னியாக உயர்ந்ததை தன் வாழ்நாளின் பிற்பகுதியில் காணும் வாய்ப்பும் ஸ்ரீதருக்கு இருந்தது. ஆனால் அதே ஸ்ரீதர் இன்றிருந்தால், இந்தப் பெண் அரசியலிலும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டிருப்பார்.
மதுராவில் ஹேமமாலினி போட்டி
ஆம், தமிழ்ப் பெண்ணான ஹேமமாலினி இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார். கடவுள் கிருஷ்ணரின் பிறந்த இடம் என்று இந்துக்களால் போற்றப்படும் நகர் மதுரா.
தனது தொகுதியில் பாயும் புனித நதியான யமுனா நதியைச் சுத்தப்படுத்துவது – வெற்றி பெற்றால் தனது எதிர்காலத் திட்டங்களுள் ஒன்று – என அறிவித்து விட்டு, பசும்பாலை அந்த நதியில் விட்டு, வேண்டிக் கொண்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கின்றார் ஹேமமாலினி.
“எனக்கு அரசியலில் சுயநலமில்லை. கடவுள் ஏற்கனவே எனக்கு நிறையக் கொடுத்திருக்கின்றார். இந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்யவே போட்டியிடுகின்றேன்” என தனது பிரச்சார முழக்கத்தையும் தொடக்கியிருக்கின்றார்.
அவரை எதிர்த்து நிற்பவரும் சாதாரணமானவர் இல்லை. உத்தரசப் பிரதேசத்தில் செல்வாக்குள்ள கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளக் கட்சியின் தலைவர் அஜித் சிங்கின் புதல்வர் ஜெயந்த் சவுத்ரிதான் ஹேமமாலினிக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்.
வெற்றி வாய்ப்புகள்
உத்தரசப் பிரதேசத்தின் மதுரா தொகுதியின் அரசியல் நிலைமை அவ்வளவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த முறை வீசும் பா.ஜ.க. – நரேந்திர மோடி அலையில் ஹேமமாலினியும் கரை சேர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் அவருக்கென இருக்கும் அழகும் கவர்ச்சியும் ஒருபுறம் கைகொடுக்க இன்னொரு புறத்தில் இந்திப் படவுலகில் நீண்ட காலமாக நிலைத்து நின்ற அவரது பிரபல்யம் இன்னொரு புறத்தில் கைகொடுக்கும்.
அவரது கணவர் தர்மேந்திராவும் புகழ் பெற்ற நடிகர் என்பதால், அவரும் பிரச்சாரக் களத்தில் இறங்கி ஹேமமாலினிக்கு உதவி செய்ய, அதனால் கூடுதல் வாக்குகளை அள்ளலாம்.
இத்தகைய பிரபல்யப் பின்னணிகளால், இந்தியத் தேர்தலில் மக்களால் கவனிக்கப்படும் மற்றொரு வேட்பாளராக ஹேமமாலினி திகழ்கின்றார்.
வாழ்க்கைப் பின்னணி
இந்தத் தேர்தலில் ஹேமமாலினி வெற்றி பெறலாம் எனக் கருதப்படுவதற்கு பாஜக செல்வாக்கு ஒரு காரணம் என்றாலும் அவரது தனிப்பட்ட கவர்ச்சி அவருக்குப் பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைக்கு, 60 வயதுக்கும் மேற்பட்ட பெண்மணிகளுக்கான அழகிப் போட்டி என்று வைத்தால் அதில் நிச்சயம் முதல் பரிசைப் பெறுவதற்கு தகுதியானவர் ஹேமமாலினி.
65 வயதான ஹேமமாலினி, இடைவிடாத நடனப் பயிற்சியாலும், கட்டுப்பாடான உணவுப் பழக்கங்களாலும் இன்னும் இளமையாகவும், மெல்லிய உடற்கட்டுடனும் திகழ்கின்றார்.
சைவ உணவுகளை மட்டுமே, தான் உட்கொள்வதாகவும், தனது உணவு வகைளில் எல்லாம் ஆலிவ் எண்ணெய்தான் பயன்படுத்தப்படும் என்றும் ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
அவர் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது, இந்திப்படக் கதாநாயகர்கள் பலர் – முன்னணி நடிகர் சஞ்சீவ்குமார் உட்பட – அவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வரிசை பிடித்து நின்றனர்.
கடைசியாக மற்றொரு இந்தி ஆணழகன் நடிகர் தர்மேந்திராவை இரண்டாம் தாரமாகக் கைப்பிடித்து படவுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்ட ஹேமமாலினி தனது முதல் காதலாகிய நடனத்தில் மட்டும் எப்போதும் கவனம் செலுத்திக் கொண்டும் நடன நிகழ்ச்சிகளை படைத்துக் கொண்டும் இருந்தார்.
அவ்வப்போது தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களிலும் இந்திப் படங்களில் நடித்து வந்தார். தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துவிட்டு, குடும்பப் பொறுப்பை நிறைவு செய்துவிட்டு அரசியல் களத்தில் குதித்திருக்கின்றார்.
இஷா டியோல், அஹானா டியோல் என்ற அவரது மகள்களும் சில படங்களில் நடித்துள்ளனர் என்றாலும், தாயார் அளவுக்கு புகழ்க் கொடி நாட்ட அவர்களால் இயலவில்லை.
உத்தரசப் பிரதேசத்தில் போட்டி ஏன்?
2004ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்த அவர் அந்தக் கட்சியின் பிரச்சாரங்களில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றார். ஏற்கனவே, ராஜ்ய சபா எனப்படும் இந்திய நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினராக இருந்த அரசியல் அனுபவமும் அவருக்குண்டு.
80 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே அதிகமான தொகுதிகளைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கின்றது.
எப்போதும் காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையானத் தொகுதிகளை வெல்ல வேண்டும் – அதற்காக பிரபலமான வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும் – என்ற பாஜகவின் வியூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மாநிலத்தில் போட்டியிடுகின்றார் ஹேமமாலினி.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில்தான் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமமாலினி, தான் போட்டியிடும் மதுரா தொகுதியில் வெற்றி பெற்றால், தமிழ்ப் பெண் ஒருவர், இந்தி பேசும் முதன்மை மாநிலங்களுள் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் வென்றார் என்ற சாதனையைப் புரிந்தவராக ஹேமமாலினி திகழ்வார்.
– இரா.முத்தரசன்
(விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவிலும், தமிழ் நாட்டிலும் பல வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் கவனிக்கப்படும் வேட்பாளர்களாகியுள்ளனர். அவர்களைப் பற்றிய பாரபட்சமற்ற, நடுநிலையான கண்ணோட்ட வரிசை இது. அடுத்தடுத்து மற்ற வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள்)