டெல்லி, ஏப்ரல் 1 – தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று சுவரொட்டிகள், கடிதம், துண்டறிக்கைகளை ஆணையம் வெளியிட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதற்கு இணையாக இந்த தேர்தலில், ஓட்டு போடுவதை ஊக்குவிக்கும் பணியில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டுள்ளது.
இதற்காக மும்பையில் மட்டும் லட்சக்கணக்கான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், கடிதங்கள் என தனது பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
இதற்காக சமூக சேவகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரின் உதவியோடு மும்பையில் ஏராளமான இடங்களில் சுவரொட்டிகளை தேர்தல் ஆணையம் ஒட்டியுள்ளது.
அவற்றில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஊழலை ஒழிக்கவும், சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று உள்ளது. வேட்பாளர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு அவருடைய சமூக சேவை மனப்பான்மையை கருத்தில் கொண்டு ஓட்டு போட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மும்பை தவிர நாட்டின் பிற பகுதிகளுக்கும் இது தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.