ஜெனிவா, ஏப்ரல் 3 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்டப் போரில் சரண் அடைந்த வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனை அடுத்து மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே நிராகரித்தார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. வின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பான் கீ மூனின் அறிக்கை தொடர்பாக அவரது துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளதாவது, சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிமுறைகளை இலங்கை அரசு மீறியிருப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய பான் கீ மூன்,
இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண்பதற்கான அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அவர் தெரிவித்தார் என பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதல் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் முயற்சிகளுக்கு பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.