பெர்த், ஏப்ரல் 7 – இந்தியப் பெருங்கடலில் ‘ஏடிவி ஓசன் சீல்டு’ என்ற ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலொன்று கண்டறிந்த மின்னியல் துடிப்பு ஒலி (Pings) உறுதியாக விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வந்தது தான் என ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது.
கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையத்தின் (Joint Agency Coordination Centre) தலைவர் அங்குஸ் ஹௌஸ்டன், கடந்த 24 மணி நேரத்தில் இந்த ஒலித் துடிப்பு இரண்டு முறை பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இரண்டாவது முறை ஒலித்துடிப்பை பதிவு செய்த போது அது விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வருவது தான் என்பதை தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஹௌஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்த இரு அடுத்தடுத்த ஒலித் துடிப்புகளும் விமானத்தின் கறுப்புப் பெட்டியிலுள்ள தகவலை பதிவு செய்யும் கருவி மற்றும் குரல் பதிவு செய்யும் கருவியில் இருந்து வருவதாகவும் பெர்த் நகரில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹௌஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்த இரு ஒலித் துடிப்புகளில் முதல் துடிப்பு 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இருந்ததாகவும், இரண்டாவது ஒலித் துடிப்பு 13 நிமிடங்கள் இருப்பதாகவும் ஹௌஸ்டன் கூறியுள்ளார்.
கடலில் சுமார் 14,764 அடி ஆழத்தில் இந்த இரு ஒலித் துடிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது ஒரு மிக நம்பிக்கையான தகவல் என்றும் ஹௌஸ்டன் கூறியுள்ளார்.