ருவாண்டா, ஏப்ரல் 8 – ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் 1994-ஆம் ஆண்டு டுட்ஸி இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 20-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் அந்நாட்டு அதிபர் போல் ககாமே மற்றும் ஐ.நா.தலைமைச் செயலர் பான் கி மூன் ஆகியோர் இணைந்து நினைவுத் தீபத்தை ஏற்றிவைத்தனர்.
உலகையே உலுக்கிய இந்த இனப்படுகொலையை, ருவாண்டாவின் அப்போதைய ஹூட்டு இனவாத அரசும், ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும் அந்த இனப்படுகொலையை முன்னின்று நடத்தினர்.
இந்த சம்பவம் பற்றி ஐ.நா.தலைமைச் செயலர் பான் கி மூன் பேசுகையில், ” இந்தப் படுகொலைகளைத் தடுக்கத் தவறியதற்கு, ஐ.நா.வின் மீதே இன்னும் வெட்கக்கேடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இனியாவது வெறுப்பு, குரூரம் ஆகியவற்றுக்கு எதிராக மனிதநேயம், சகிப்புத்தன்மையைக் கொண்டு அனைவரும் போராட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ருவாண்டாவில் சுமார் எட்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையின் 20-வது ஆண்டு நிறைவை ஒட்டி, அந்நாடு ஒருவார கால அரச துக்க காலத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.