ஏப்ரல் 10 – தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு தமிழனுக்கு பிரச்சனையென்றாலும், அயல் நாட்டுத் தமிழன் ஒருவனுக்கு இழிவு என்றாலும் – அதனை சரிநிகர் சமமாகப் பார்த்து , ஒரு சேர ஒலிக்கும் உரிமைக் குரலுக்குச் சொந்தக்காரர் வைகோ!
அது மட்டுமல்ல! காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழ் நாட்டுக்கு துரோகம் இழைக்கப்படுகின்றது என்றாலும், கேரள எல்லையில் அணைக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குப் பாதிப்பு என்றாலும் முதல் ஆளாக நின்று போராடுபவரும் வைகோதான்!
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் நாட்டின் மனசாட்சிக் குரலாக – இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் கொந்தளிக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக – செயல்படுபவரும் வைகோதான்!
மொத்தத்தில், தமிழுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் என்றென்றும் வாதாடுகின்ற ஒரு நிரந்தர வழக்கறிஞர் ஒருவர் உண்டென்றால் அது வைகோதான்!
அதே சமயம், தொழில் ரீதியாகவும் அவர் உண்மையிலேயே வழக்கறிஞர்தான் என்பது இன்னொரு சிறப்பு!
விருது நகரை வெற்றி கொள்வாரா?
சினிமாப் பின்னணி இல்லாமல், தமிழ் நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெரிய அளவில் பெற்றிருந்தாலும், தமிழ் நாட்டு அரசியல் சுழலில் சிக்கி, தன் திறமைக்கும் ஆற்றலுக்கும் உரிய இடத்தைப் பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர் வைகோ.
இந்த முறை, பாஜக, விஜயகாந்த்தின் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆதரவோடு விருது நகர் தொகுதியில் நிற்கின்றார். தென் மாவட்ட தொகுதி என்பதாலும், அந்த வட்டாரத்தில் அவருக்கு ஆதரவு பலம் அதிகம் என்பதாலும், வெல்லக் கூடிய வேட்பாளராக வைகோ கருதப்படுகின்றார்.
மதுரைக்காரரான விஜய்காந்தின் ஆதரவு, வைகோ இல்லத்திற்கு அவர் வருகை தந்தது, தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள மு.க.அழகிரி வழங்கியுள்ள ஆதரவு, பழைய திமுக காரர் என்ற பாசம், போன்ற அம்சங்களும் வைகோவுக்கு சாதகமாக விளங்குகின்றன.
முதல்வர் ஜெயலலிதா வைகோவுடன் கடுமையான பகைமை பாராட்டதது மற்றொரு பலமான அம்சம்.
இந்த முறை மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பிரகாசமான வாய்ப்பிருப்பதால், நரேந்திர மோடியின் நன்மதிப்பையும், நட்பையும், பெற்றுள்ள வைகோ, இந்த முறை வென்றால், அதன் மூலம் மத்திய அரசாங்கத்தில் ஓர் முக்கிய இடத்தைப் பிடிப்பார் – அமைச்சராகக் கூட ஆகலாம் – என்ற எதிர்பார்ப்பும் கூடியிருப்பதால், தமிழ் நாட்டிலும், அகில இந்திய அளவிலும் கவனிக்கப்படும் வேட்பாளராக உருவெடுத்திருக்கின்றார் வைகோ!
அரசியல் பின்னணி
வை. கோபால்சாமி என்ற இயற்பெயர் கொண்ட வைகோ, 1944ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர்.
தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் நடப்புப் பொதுச்செயலாளர்.
இவர் பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கலிங்கப்பட்டி. தான் பிறந்த ஊரைத் தளமாகக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதியில்தான் வைகோ போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார் என்பதால், இந்த முறை இங்கு வெல்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றது எனலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியை, கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தப்பட்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக அனுபவம்…
மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.
திமுகவில் தொடங்கிய அரசியல் வாழ்க்கை….
1964-ஆம் ஆண்டு ,பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்பு கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.
சரித்திரம், சட்டம், அரசியல், இலக்கியம் என அனைத்தும் கலந்து மேடையில் முழங்கும் வைகோ, எளிதில் உணர்ச்சி வசப்படுவதிலும் பிரபல்யம் அடைந்தவர். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது எளிதில் உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்ணீர் விட்டு கலங்கும் காட்சிகள் தமிழ் நாட்டு மக்கள் அடிக்கடி பார்க்கும் நிகழ்வுகள்!
சிறந்த எழுத்தாளருமான வைகோ 2004-2009 ஆண்டுகளில் இந்திய அரசு, ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு எப்படி எல்லாம் உதவியது என்பது குறித்து எழுதி வெளியிட்டதுதான் “குற்றசாட்டுகிறேன்” என்ற தலைப்பிலான புத்தகம்.
இந்த புத்தகத்தில் 2004-2009 ஆண்டுகளில் இந்திய பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்கு பிரதமர் எழுதிய கடிதங்களையும் வைகோ தொகுத்து உள்ளார் வைகோ.
இதை ஆங்கிலத்தில் “I Accuse” என்ற தலைப்பிலும் வைகோ வெளியிட்டு உள்ளார்.
அதிகமாக படிக்கும் பழக்கத்தை உடையவர். சிறையில் இருந்த 19 மாத காலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்து முடித்தார்.
இன்றைய கூட்டணி, வைகோவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சேர்க்குமா?
தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் வைகோ. இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக, ஐஜேகே, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணியின் ஆதரவோடு, இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ வெல்வாரா என்ற ஆவல் பரவலாக எழுந்திருக்கின்றது.
வைகோ விருது நகரில் வெல்ல வேண்டும், நாடாளுமன்றம் செல்ல வேண்டும் – இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்காக, தமிழருக்காக அவர் குரல் ஒலிக்க வேண்டும் – என்பதுதான் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் பேராவலாக இருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
– ஜேம்ஸ் சேவியர்.